அழைப்பு!

Friday, April 15, 2005

மேடை பேச்சிற்கான குறிப்புகள்

மேடை பேச்சிற்கான குறிப்புகள்

1. உரை தயாரிப்பு
2. தோற்றம் - உடை
3. சைகைகள் / சமிக்ஞைகள்
4. பார்வை
5. முகபாவனை
6. குரல் வளம்
7. ஒலி ஏற்ற - இறக்கம்
8. பார்வையாளரின் பிரதிபலிப்பு
9. நேரம் / கால அளவு
10. முன்னுரை
11. முடிவுரை

இஸ்லாமிய சேவை / தஃவா பணி / அழைப்பு பணி

இஸ்லாமிய சேவையின் முக்கியத்துவம்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''தனக்கு விருப்பமானதை தன் சகோதரருக்கும் விரும்பாதவரை யாரும் உண்மையான இறைநம்பிக்கையாளராக முடியாது''.

இஸ்லாமிய அழைப்பாளரின் பொறுப்பு
ஒரு இஸ்லாமிய அழைப்பாளர்; தன் சொந்த பொருளாதார ஆதாயத்தை விட தன் நேரம், செல்வம், சக்தி, ஆற்றல் ஆகிய அனைத்தையும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும், சமுதாயத்திற்கும் செலவிடுவதையே விரும்புவார், தேர்ந்தெடுப்பார்.

இஸ்லாம் தனிப்பட்ட முயற்சியை விட கூட்டு முயற்சியை, சேவையை ஆதரிக்கிறது.

''இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலை நிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர். மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாக) செலவு செய்வார்கள்''.அல்குர்ஆன் சூரா அஸ்ஸுரா 42:38

இஸ்லாமிய அழைப்பாளரின் பங்கு:
முஃமீனான ஆண்களும் முஃமீனான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதை செய்யத் தூண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகிறார்கள். தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்(ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் சூரா தவ்பா 9:71)

தினசரி வாழ்வின் ஒழுங்கு முறைகள்

அன்றாட - தினசரி வாழ்வின் ஒழுங்கு முறைகள்!


இஸ்லாம் நற்பண்புகளை, நற்குணங்களைப் பேண வேண்டும் என மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றது.

அல்லாஹ் தன் திருமறையில் ஒழுக்க மாண்புகள் பற்றித் தெளிவாகக் கூறுகின்றான்.

உதாரணம் அல்குர்ஆன் சூரா முதஸ்ஸிர் 73 : 4 - 5 ''நபியே! “ உம் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக. மேலும் அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக.""

அல்குர்ஆன் சூரா பகரா 2 : 43-44 “(மனிதர்களே) தொழுகையை நிலைநிறுத்துங்கள். மேலும்“ஏழைகளுக்கு ஜகாத் என்னும் நிதியை வழங்குவீராக”.

அல்குர்ஆன் சூரா இஸ்ரா 17 : 24“ “உம் பெற்றோருக்கு பணிவிடை செய்வீராக”.

நற்பண்புகள்
நற்குணங்களின் ஒட்டு மொத்த வடிவமாக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு அமைந்திருந்தது. அவர் தம் போதனைகளின் பெரும்பகுதி மனிதர்களிடம் நடந்து கொள்ளக்கூடிய ஒழுக்க மாண்புகளை மனித நேயத்தை வலியுறுத்துகிறது. ஏழைகளுக்கு பொருள் உதவி செய்தல் போன்ற வெளிப்படையான நற்பண்புகள் அல்லாது இன்ன பிற நற்பண்புகள் ஆகிய ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம், சீர்திருத்தம், மனித நேயம் மற்றும் அனைத்து நற்பண்புகளின் பிரதிபலிப்பாக ஒரு முஸ்லிமுடைய வாழ்வு இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமை அவனுடைய நற்பண்புகளையும்/ குணங்களையும் கொண்டே அடையாளம் காணப்பட வேண்டுமே தவிர பெயர் கொண்டு அல்ல.

I. தகவல் தொடர்பு பண்புகள் / ஒழுக்கங்கள்
1. எப்பொழுதும் புன்னகை புரிந்த முகத்துடன் இருக்கவும்; இறுக்கமான, கடுகடுத்த முகத்துடன் இருப்பதைத் தவிர்க்கவும்.

2. எப்பொழுதும் மென்மையாக உரையாடுங்கள்; குரலை உயர்த்திப் பேசுவதை தவிர்க்கவும்.

3. சத்தமின்றி மென்மையாகச் சிரியுங்கள்; பலத்த சப்தத்துடன் சிரிப்பதைத் தவிர்க்கவும்.

4. நிற்பவரிடம் எழுந்து நின்று பேசுங்கள் அல்லது அவரை அமருமாறு கூறுங்கள்; அவர் அமர்ந்த பின் நீங்கள் அமரவும்.

5. ஒருவரை சந்திக்கும் பொழுது ஸலாத்தைக் கொண்டு முந்துங்கள், இரு சந்தர்ப்பங்களில் தவிர (1) நீங்கள் அமர்ந்திருக்க, மற்றவர் உம்மை நோக்கி நடந்து அல்லது வாகனத்தில் முன்னேறி வந்தால். (2) நீங்கள் பிறருடன் சேர்ந்திருக்க, அவர் தனித்து வந்தால்.

6. ஸலாத்திற்கு உற்சாகமான, உபசரிப்பான, ஆர்வமான குரலில் முழு பதில் அளியுங்கள்.

7. பொது இடங்களில் கொட்டாவி விடுவதைத் தவிர்க்கவும். தவிர்க்க இயலாத பட்சத்தில் கை கொண்டு வாயை மூடவும்.

8. எப்பொழுதும் நேராக நிமிர்ந்து நில்லுங்கள். நீங்கள் தனித்து இருந்தால்; குனிந்தோ, சாய்ந்தோ நிற்கலாம்.

9. பேசுபவரின் உரையை(பேச்சை) கூர்ந்து, ஆர்வமுடன் கவனிக்கவும்.

10. கேட்கும் நபர் அல்லது கூட்டத்தினர் உம்முடைய பாலினமாக இருப்பின் அவர் முகத்தை நேருக்கு நேர் நோக்கிப் பேசவும்.

11. நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் மற்றவர் தும்மிவிட்டு “அல்ஹம்துலில்லாஹ்” எனக் கூறுவதை செவியுற்றால், நீங்கள் தவறாது “யர்ஹமுகுமுல்லாஹ்” எனக் கூறவும் (அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக.)

12. மற்றவரிடம் உம்மைப் பற்றி பெருமையாக கூறவேண்டாம். பிறருடைய குறைகளை அது உண்மையாக இருந்தபோதிலும் கூறுவதைத் தவிர்க்கவும்.

13. பேசுபவரை பாராட்டத் தவறாதீர்; இடையிடையே அவருக்கு இறைவன் கிருபை செய்ய துஆ செய்யவும்.

II. புறத்தோற்ற ஒழுக்கமாண்புகள்
1. சுத்தம் ஈமானில் ஒரு பகுதி ஆகும். எனவே, எங்கும் எப்பொழுதும் சுத்தமாக இருக்கவும். நாள்தோறும் குளித்து சுத்தமான ஆடையை அணியவும்.

2. தலை முடியை குறைத்தும், சீராகச் சீவி இருக்கவும் (ஆண்களுக்கு)

3. விரல் நகங்கள் நீண்டு, அழுக்குப் பிடிக்குமுன் அவற்றை வெட்டிவிட வேண்டும். ஒவ்வொரு வெள்ளியும் தொழுகைக்குச் செல்லுமுன் அவற்றை வெட்டுவது சிறந்தது. அடிக்கடி முகம், கைகளைக் கழுவி, வாய் கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும். தலை முடியை அடிக்கடி சீவிச் சீராக இருக்க வேண்டும். (ஆண்களுக்கு)

4. இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்கவும்.

5. உட்காரும் பொழுது கைகளை, கால்களை விரிக்காது சேர்த்து அமரவும்.

6. முகத்தை இறுக்கமாக, கடுகடுப்பாக வைக்காது, இயற்கையான தோற்றத்தில் புன்னகையோடு இருப்பது சிறந்தது.

7. உங்களுக்கு அதிகம் வியர்வை வெளியேறுமாயின், ஆல்கஹால் கலக்காத அத்தர் போன்ற நறுமணம் பூசவும் (ஆண்களுக்கு).

III. வகுப்பறை ஒழுக்கம்
1. வகுப்பு தொடங்குவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு வகுப்பறையில் நுழைந்து விடுங்கள். உங்களுடைய புத்தகம், நோட்டு, பேனா முதலியவற்றை தவறாது எடுத்து செல்லவும்.

2. நேராக நிமிர்ந்து அமரவும் - பேசுபவரின் முகத்தை நோக்கவும் - அங்குமிங்கும் பார்வை அலைவதைத் தவிர்க்கவும்.

3. ஆசிரியர் பாடம் நடத்தும் போது, நன்கு கவனித்து குறிப்பு எடுக்கவும். கூட அமர்ந்திருப்பவரிடம் பேசுவதைத் தவிர்க்கவும்.

4. பாடம் எடுப்பவரை இடைமறித்து பேச வேண்டாம். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கையை உயர்த்தவும். அனுமதி கிடைத்தால் பேசவும். அனுமதி தரப்படாதப் பட்சத்தில் அமைதியாக கையை கீழே விடவும். வகுப்பு முடிந்தவுடன் தனியே சந்தித்து கேட்கலாம்.

5. வகுப்பு முடிவடையும் நேரம் நெருங்கியவுடன் பரபரப்பு அடைய வேண்டாம். ஆசிரியர் வெளியே செல்லும் வரை அல்லது வகுப்பு முடிந்து விட்டது என ஆசிரியர் அறிவிக்கும் வரை வகுப்பை விட்டு வெளியேற வேண்டாம்.

6. எந்த ஒரு அமர்வு அல்லது கூட்டத்திலும் சாப்பிடுவதோ, குடிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் வழங்கினால் சாப்பிடவோ, குடிக்கவோ செய்யலாம்.

7. ஆசிரியரின் கருத்திற்கு நீங்கள் உடன்படவில்லையெனில் அதை மென்மையாக வகுப்பறையின் ஒழுங்கு கெடாமல் கூறவும்.

IV. உண்ணும் ஒழுங்குமுறை
1. உணவு உண்ண ஆரம்பிக்கும் முன் முகம், கைகளை கழுவி, வாய்க் கொப்பளித்து சுத்தம் செய்யவும்.

2. அனைவரும் உண்ண ஆரம்பித்த பின் நீங்கள் உண்ண ஆரம்பியுங்கள். அதற்கு பிறகு தாமதமாக யாரேனும் வந்து இடமின்றி தவித்தால், உங்களுடைய இருக்கையை சுருக்கி அவரை அமர வைக்கவும்.

3. அனைவருக்கும் கேட்கும் வண்ணம் 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்' எனக்கூறி உண்ண ஆரம்பிக்கவும்.

4. உங்களால் சாப்பிட முடிந்த அளவு மட்டும் தட்டில் எடுக்கவும், தேவை ஏற்படின் மீண்டும் சிறிது உணவு எடுத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், அதிக அளவு உணவு எடுத்து சாப்பிடமுடியவில்லை என தட்டில் மீதம் வைப்பது வீண் விரயமாகும்.

5. உணவை அப்படியே விழுங்கி விடாது, நன்றாக மென்று சாப்பிடவும்.

6. வலது கை கொண்டு உணவு உண்ணவும், நீர் அருந்தவும்.

7. கூட அமர்ந்திருப்பவர்களுக்கு உணவு பரிமாறி உதவுவது சிறந்தது. ஏதேனும் கூடுதல் பதார்த்தங்கள் எடுக்க எழுந்தால் அருகில் உணவு உண்பவர்களுக்கு ஏதேனும் வேண்டுமா எனக் கேளுங்கள்.

8. மேஜையில் பரிமாறப்பட்ட உணவு தவிர ஐஸ் கிரீம், ஸ்வீட் போன்ற, தனி தட்டில் வைத்துத் தரும் உணவு உங்களுக்கு வழங்கப்பட்டது எனத் தெரியாதவரை அதை உண்ண வேண்டாம். மேலும், உங்களுக்கு வழங்கப்பட்ட இது போன்ற உணவை அருகில் உள்ளவர் எடுத்துக் கொண்டால் அதை விட்டுவிட்டு வேறு ஒன்றை நீங்கள் பரிமாறுபவரிடம் கேட்டுப் பெறவும்.

9. நீங்கள் உணவு உண்டு முடித்து விட்டாலும், அனைவரும் முடிக்கும் வரை பொறுமையாக அமர்ந்து இருக்கவும்.

10. நீங்கள் உணவருந்திய தட்டையும், மேஜையையும் சுத்தமாக வைக்கவும்.

11. உணவருந்திய பின் அனைவரும் கேட்கும்; வண்ணம் "அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறி துஆ செய்யவும்.

12. உணவருந்திய பின் கைகளை கழுவி, வாய் கொப்பளித்து சுத்தம் செய்யவும்.

V. தூங்கும் முறை
1. இரவில் முன்னதாக உறங்கச் செல்லவும்.

2. தூங்குமுன் ஒளு செய்து கொள்ளவும்.

3. படுக்கும் முன் துவா செய்யவும்.

4. கடிகார அலாரம் அடித்தவுடன் எழுந்துவிடவும். அவ்வாறன்றி, சிறிது நேரம் மெத்தையில் படுத்து இருப்போம் என எண்ணி மீண்டும் படுத்தால் தூங்கி விடுவீர்கள். ஆகவே அதைத் தவிர்க்கவும்.

5. தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தவுடன் துஆ செய்யவும்.

6. பல் துலக்கி, ஒளு செய்து, ஆடைகளை சரியாக அணிந்து கொண்டு தொழச் செல்லவும்.

7. பஜ்ர் ஃ பர்ளு தொழுகைக்கு இகாமத் கூறுமுன் பள்ளியில் நுழைந்து விடவும்.

நேரம் / கால மேலாண்மை

உங்களுக்குத் தெரியுமா?

எது நீளமானதும், குறுகியதாகவும் உள்ளது? எது விரைவாகவும், அதே சமயத்தில் மெதுவாகவும் கடப்பது? எது அனைவரும் புறக்கணித்துவிட்டு பின்பு வருந்துவது? எதுவும் அதுவின்றி நடவாது; எது அனைத்துச் சிறிய காரியங்களையும் ஒதுக்கச்செய்து, அதன் பின்விளைவோ தீங்கானது? அது என்னவென்று நீங்கள் அறிவீர்களா?

அது தான் நேரம் - காலம் என அறியப்படுவது.நேரம் / காலம் கழியும் விதம் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலத்தில் என்னென்ன காரியங்களை செய்ய எவ்வளவு நேரம் செலவழிக்கிறான் என்பதை கீழ்வரும் அட்டவணை உணர்த்துகிறது.

செயல் செய்யும் நேரம்
காலணி அணியும் நேரம் 8 நாட்கள்
போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு காத்திருத்தல் 1 மாதம்
முடிவெட்டும் நேரம் 1 மாதம்
தொலைபேசி உரையாடல் 1 மாதம்
லிஃப்ட்களில் பயணம் செய்வது (பெரு நகரங்களில்) 3 மாதங்கள்
பல் துலக்குவது 3 மாதங்கள்
பேருந்து ஃ வாகனத்திற்கு காத்திருப்பது 5 மாதங்கள்
குளிக்கும் நேரம் 6 மாதங்கள்
புத்தகம் படிப்பது 2 வருடங்கள்
உண்பது 4 வருடங்கள்
அலுவலக / வியாபார வேலைகள் 9 வருடங்கள்
தொலைக்காட்சி பார்ப்பது 10 வருடங்கள்
தூக்கம் 20 வருடங்கள்

கால மேலாண்மைக்கு அரிய சில யோசனைகள் / நேரம் வீண் விரயமாவதை தடுக்க சில வழிமுறைகள்

தினமும் காலையில் அன்றைய தினம் செய்ய வேண்டிய காரியங்களைத் திட்டமிட்டு வரிசைப்படுத்தி ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு, அதை சரிவர நிறைவேற்றுகிறோமா என அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளவும்.

_________________________________________________________
அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய அருமைமொழி ஒன்றை ஞாபகம் கொள்ளவும்.

'' எவருடைய இரண்டு நாட்களும் ஒன்று போல் - சமமாக உள்ளதோ (அதாவது நன்மை கூடி, தீமை குறையவில்லையோ) அவர் நிச்சயமாக வழிகேட்டில் உள்ளார் / நஷ்டவாளி ஆவார்'.

முடிவுரை :-
அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அம்ரு இப்னு மைமூன் அறிவிக்கக்கூடிய ஹதீஸ் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
' ஐந்து விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தி அவற்றைச் சீராக்கினால், அதையடுத்து வரும் ஐந்து விஷயங்கள் உங்களுக்கு எளிதாக இருக்கும்'.

1. நீங்கள் முதுமை அடையும் முன் உங்கள் இளமையைச் சரியாகப் பயன்படுத்துங்கள்

2. நீங்கள் நோயால் பீடிக்கப்படுமுன் உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

3. நீங்கள் வறுமை அடையுமுன் உங்கள் செல்வத்தைச் சரியாகச் செலவழியுங்கள்.

4. உங்கள் பணிச்சுமை அதிகரிக்குமுன் உங்கள் ஒய்வு நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

5. உங்களை மரணம் பீடிக்குமுன் உங்கள் வாழ்க்கையைச் சீராக, சரியாக, நல்வழியில் பயன்படுத்தி, ஈருலக வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

சிந்தியுங்கள் - செயல்படுத்துங்கள் - வெற்றி பெறுங்கள் இன்ஷா அல்லாஹ் !

வெற்றிக்கான படிகள் - (குறிப்புகள்)

வெற்றிக் கனிகள்

• மனிதகுல வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாளர், அனைத்துத் துறைகளிலும் வெற்றி கண்டவர் நமது கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பது உலகறிந்த உண்மை.

• மைக்கேல் ஹார்ட் என்ற கிறித்துவ அறிஞர் உலக வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர்களைப் பட்டியலிட்டு, ''தர நிர்ணயம்"" வழங்கிய போது முதலாவதாக அவர் தேர்ந்தெடுத்தது முஹம்மது (ஸல்) அவர்களைத் தான். அதற்கு அவர் கூறிய காரணம், “உலக வரலாற்றில் ஆன்மீகம் மற்றும் லௌகீகம் - உலகியல் ஆகிய இரு துறைகளிலும் ஒரு சேர வெற்றி கண்டவர் முஹம்மது நபியைத் தவிர வேறு எவரையும் நான் காணவில்லை" என்பதாகும்.

• திருக்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தான் முழு மனித குலத்திற்கும் பின்பற்றத்தக்க முன் மாதிரியாக அறிவிக்கின்றது. உண்மையில் அவர் ஒருவர் தான் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரு வாழ்க்கையிலும் மனிதர்கள் வெற்றி அடைவதற்குரிய வழிமுறைகளைத் தெளிவாக நமக்கு வாழ்ந்து காண்பித்துள்ளார்.

• முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் படித்து அவர் வெற்றிகரமாக பின்பற்றிய கொள்கைகளை - செய்த நற்செயல்களை நாமும் பின்பற்றலாம். ஏனெனில், தோல்வியையும் வெற்றியாக மாற்றவல்ல சீரிய சிந்தனையாளராக அவர் விளங்கினார்.

• அவருடைய அனைத்துச் செயல்களும் நல்ல முடிவினை - வெற்றியை தருவதாக இருந்தன. அவர் தீமை மற்றும் தீய பின் விளைவுகளை ஏற்படுத்தும் காரியங்களை - செயல்களை விட்டு என்றுமே ஒதுங்கி இருந்தார்.

________________________________

1. முதல் கனி

தன்னால் செய்து முடியக்கூடிய செயல்களிலிருந்து ஆரம்பம் செய்வது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கக் கூடிய ஹதீஸ், புகாரியில் கீழ்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எப்பொழுதெல்லாம் ஒரு விஷயம் குறித்து இரு கருத்துக்கள் நிலவுகிறதோ, அவற்றில் மிகவும் எளிதானதையே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.”

மிகவும் எளிதான இலகுவான வழியை தேர்ந்தெடுப்பது என்னவெனில் தன் ஆற்றலால் சக்தியால் செய்து முடிக்கக் கூடிய விஷயத்திலிருந்து ஆரம்பம் செய்வது. எவர் இவ்விதமாக தன் காரியங்களையும் செயல்களையும் ஆரம்பிக்கின்றாரோ அவர் தான் வெற்றி பெறுவார்.

2. இரண்டாவது கனி
பாதகத்தை, சாதகமாக மாற்றுவது.

இஸ்லாமிய ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலகட்டத்தில் மக்கா குறைஷிகளால் முஹம்மது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் பெருந்துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அச்சமயத்தில் இறைவன் திருமறையின் ஓர் வசனத்தை ஆறுதலாக இறக்கியருளினான்.

''ஒவ்வொரு துன்ப காலத்திற்கு பின்பும் இன்பம் - மகிழ்ச்சி உள்ளது. ஒவ்வொரு துன்ப காலத்திற்கு பின்பும் இன்பம் - மகிழ்ச்சி உள்ளது""அல்குர்ஆன் சூரா நஷ்ரஹ் 94 : 5 - 6

இவ்வசனம் நமக்கு உணர்த்துவது என்னவெனில் ஒருவர் எப்பொழுதெல்லாம் துன்பம் - துயரம் அனுபவிக்கிறாரோ அதைத் தொடர்ந்து இன்பம் நன்மை உறுதியாக வரவுள்ளது என நம்பி பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஆகவே, துன்பம் - துயரத்தை உறுதியுடனும், துணிச்சலோடும் எதிர்கொண்டு, வரவிருக்கும் இன்பம் - நன்மையை எதிர்பார்த்துப் பொறுமையோடு இருப்பவரே வாழ்வில் வெற்றி பெறுவார்.

3. மூன்றாவது கனி
பணி இட மாற்றம் செய்வது.

எங்கு நமக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறதோ அங்கு நம்முடைய இருப்பிடத்தை மாற்றிக் கொள்வது. இது நமக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிஜ்ரா தரும் படிப்பினை. மக்காவிலிருந்து மதீனாவிற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இடம் பெயர்ந்ததற்கு முக்கிய காரணம் மதீனாவில் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமையில் கட்டுப்பட்டு வாழ விரும்பி முன் வந்ததாகும்.

4. நான்காவது கனி
எதிரியை அன்பால் வீழ்த்தி தோழனாக்கி கொள்வது

இஸ்லாமிய ஆரம்ப கால வரலாற்றில் மக்கத்துக் குறைஷிகளால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். அப்பொழுது இறைவன் தன் திருமறை குர்ஆன் மூலம் அறிவுறுத்துகிறான்.

''உமக்கு தீமையே செய்தவனுக்கும் நன்மை செய். அதன் மூலம் உம்முடைய பெரும் எதிரி கூட உம் உற்ற நண்பன் ஆவதை காண்பீர்". அல்குர்ஆன் சூரா ஃபுஸ்ஸிலத் 41: வசனம் 34

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தன் அன்பிற்குரிய சிறிய தந்தை பாலைவனச் சிங்கம் ஹம்ஜா (ரலி) அவர்களை நயவஞ்சகமாக வீழ்த்தி, அவர் உடலைக் கூறுபோட்டு கேவலப்படுத்திய ஹிந்தா, மற்றும் பல போர்களுக்கு தலைமையேற்ற அபு சுஃப்யான் போன்றோரை மக்கா வெற்றிக்குப் பின்பு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெருந்தன்மையுடன் மன்னித்து விட்டனர். அதன் விளைவு அவர்கள் இருவரும் இஸ்லாத்தைத் தழுவி, நபியுடைய தோழி, தோழன் - சஹாபா (ரலி) ஆகினார்கள்.

இக்கொள்கையை என்றும் திருந்தாத கல் நெஞ்சக் கயவர்களிடம் பயன்படுத்த இயலாது. உதாரணம் அபு ஜஹ்ல்.

5. ஐந்தாவது கனி
நற்சந்தர்பங்களை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது.

சந்தர்ப்பம் - வாய்ப்பு ஒருவனுக்கு வாழ்க்கையில் ஒருமுறை தான் வரும். யார் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கிறாரோ அவர் வெற்றி பெறுவார். இதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த எண்ணற்ற விஷயங்களில் ஒன்றைக் குறிப்பிடலாம். பத்ர் யுத்தத்திற்கு பின்பு முஸ்லிம்களிடம் 70 நிராகரிப்பாளர்கள் கைதிகளாக இருந்தனர். அவர்களில் பிணைத்தொகைக் கட்டினவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பிணைத்தொகைக் கட்ட இயலாதவர்களுக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் விடுதலைக்கு எளிய வழி ஒன்றைக் கூறினார்கள்.

• தவறுகளுக்கு அஞ்சுங்கள் / விமர்சனங்களை மதியுங்கள்.
உமர் (ரலி) கூறினார்கள் என்னுடைய “தவறுகளை / குறைகளை சுட்டிக்காட்டுபவர் மீது இறைவன் கருணை புரிவானாக.”

• தோல்விகளைக் கண்டு அஞ்சாதீர்கள்.
முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள். எந்த ஒரு முஃமீன் இறை நிராகரிப்பாளர்களோடு கலந்து உறவாடி, அவர்களுக்கு நன்மை செய்ய நாடி தோல்வி கண்டு புண்படுகிறாரோ அவர், நிராகரிப்பாளர்களோடு உறவாடாது ஒதுங்கி இருப்பவரை விட சிறந்தவர்.

• அவரவருக்குரிய மரியாதையை, கண்ணியத்தை கொடுங்கள்.
“யார் ஒரு மனிதருக்கு ஒரு பொறுப்பை, பதவியை அவரைவிட சிறந்தவர், தகுதியானவர் இருக்க,வழங்குகிறாரோ அவர் நிச்சயமாக, அல்லாஹ்வையும், அவன் தூதரையும், அனைத்து முஸ்லிம்களையும் ஏமாற்றியவராவார்”.- அல்ஹாதீம் மற்றும் இப்னுதைமிய்யா

• அழைப்பு பணியில் சிறக்க பொறுமை அவசியம்:
நிச்சயமாக உங்களை ஒரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள் மற்றும் கனி வர்க்கங்களின் இழப்பினாலும் நாம் சோதிப்போம். அச்சமயத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பவருக்கு(நபியே!) நற்செய்தி கூறுவீராக. பொறுமை உடைய அவர்கள் தங்களுக்கு துன்பம் ஏதேனும் பீடித்தால் “ நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள். அவனிடமே நம் மீளுதலும் இருக்கிறது” என்று கூறுவர். இத்தகைய பொறுமையுடையோருக்கே இறைவன் அருளையும்,கருணையையும் வழங்குவான். இத்தகையோரே தம் இறைவனின் நல் வழியில் செல்வர்” அல்குர்ஆன் சூரா பகரா 2: 155 - 157

அல்லாஹ்வுடன் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் செயல்கள்:
அல்லாஹ் இறுதி தீர்ப்பு கியாம நாளில் கூறுவான்:-
“ஒ ஆதமின் மகனே! நான் நோயுற்றிருக்கும் போது நீ என்னை சந்தித்து ஆறுதல் அளிக்கவில்லையே!. அதற்கு அந்த மனிதன் கூறுவான்: ''யாஅல்லாஹ்! அகிலங்களின் இறைவனான உன்னை எவ்வாறு நான் சந்திக்க முடியும்?"" அதற்கு இறைவன் கூறுவான்: ''என்னுடைய இந்த அடியான் நோயுற்றிருந்ததை நீ அறியவில்லையா? அவனை நீ சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால், நிச்சயமாக அது என்னை சந்தித்ததற்கு சமமாகும்"".

''ஆதமின் மகனே! நான் பசியோடு உன்னை அணுகியபோது நீ எனக்கு உணவளிக்கவில்லையே!"" அதற்கு அம்மனிதன் கூறுவான்: ''யாஅல்லாஹ்! அகிலங்களின் இறைவனான உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க முடியும்?"" அதற்கு இறைவன் கூறுவான்: ''என்னுடைய இந்த அடியான் பசியோடு உன்னை அணுகி உணவு கேட்டானே, அவனுக்கு நீ உணவு அளித்திருந்தால், நிச்சயமாக அது எனக்கு உணவளித்ததற்கு சமமாகும்!".

''ஆதமுடைய மகனே! நான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து நீர் கேட்ட போது, நீ தண்ணீர் அளிக்கவில்லையே!"" அதற்கு அம்மனிதன் கூறுவான்: ''யாஅல்லாஹ்! அகிலங்களின் இறைவனான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர முடியும்?"" அதற்கு இறைவன் கூறுவான்: ''என்னுடைய இந்த அடியான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து தண்ணீர் கேட்கவில்லையா? அப்போது நீ அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் நிச்சயமாக அது எனக்குத் தண்ணீர் கொடுத்ததற்குச் சமமாகும்"".முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹ-ரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் - ஸஹீஹ் முஸ்லிம் எண் : 18

இந்த ஹதீஸ் நமக்கு தரும் படிப்பினை என்னவென்றால் தேவையுடையோர் நம்மை அணுகும் போது அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வது நம் தலையாய கடமையாகும்.

முக்கிய பண்புகள் / ஒழுக்கங்கள்
• தவிர்க்க வேண்டியவை
எதிலும் ஈடுபடாது ஒதுங்கிக் கொள்வது
நான் ஈடுபட விரும்பவில்லை என அடிக்கடி கூறுவது.
முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள் - “''இஸ்லாத்தில் துறவறத்திற்கு அனுமதி இல்லை"".

ஒரு கைதி 10 முஸ்லிம்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தால் விடுதலை செய்யப்படுவார் என அறிவித்தார்கள். இது தான் இஸ்லாமிய வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட முதல் அறிவொளி இயக்கம். அதன் மாணவர்களோ முஸ்லிம்கள். ஆசிரியர்களோ எதிரிப் படை நிராகரிப்பாளர்கள். இதை அறிந்த இங்கிலாந்து நாட்டு அறிஞர் ஒருவர் கூறுகின்றார்: ''தனக்கு வந்த கஷ்ட காலத்தையும் - எதிர்ப்பையும் திடமான மனத்துடன் எதிர்க்கொண்டு தோல்வியை வெற்றியாக மாற்றிக் காட்டியவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தான்" என்று புகழாரம் சூட்டினார்.

6. ஆறாவது கனி
பழி வாங்குவதைக் காட்டிலும் மன்னிப்பே சிறந்தது.

பழிவாங்கும் தன்மையைக் காட்டிலும் மன்னிக்கும் பண்பே சிறந்தது. மக்கா வெற்றி கொள்ளப்பட்டு,பல்லாயிரக்கணக்கான தன் தோழர்களோடு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவினுள் பிரவேசித்தார்கள். அப்பொழுது மக்காவிலிருந்த குறைஷி நிராகரிப்பாளர்கள் சொற்பத் தொகையினரே. அவர்கள் எல்லாம் பல ஆண்டுகள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்தம் தோழர்களுக்கும் பல்வேறு தொல்லைகள், துன்பங்கள் இழைத்தவர்கள். அவர்கள் எல்லாம், பெரும்படையுடன் மக்காவினுள் பிரவேசிக்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம்மை பழிவாங்குவார்கள் என அஞ்சி தங்கள் வீடுகளுக்குள் முடங்கி, பயந்து கொண்டு இருந்தனர். ஆனால், பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களோ ''தவறு செய்த அனைவரையும் நான் மன்னித்து விட்டேன். நீங்கள் அச்சம் கொள்ளாது சுதந்திரமாக வெளியே வரலாம்", எனக்கூறி பொது மன்னிப்பு வழங்கினார்கள். அதன் பயன் - விளைவு என்ன தெரியுமா? அவருடைய எதிரிகள் நெஞ்சுருகி, எவரை ஒழித்துக் கட்டுவது, தம் வாழ்நாளின் குறிக்கோள் என்று கூறி வந்தனரோ செயல்பட்டனரோ, அவரையே தம் தலைவராக மனமுவந்து ஏற்றார்கள் - இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

காலத்தின் முக்கியத்துவம்

• நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்கவும்; ஏனெனில், அதுவே உங்கள் ஆற்றலின் / திறமையின் அளவுகோல்.

• உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவும்; ஏனெனில், அதுவே உங்கள் இளமையின் ரகசியம்.

• படிப்பதற்கு நேரம் ஒதுக்கவும்; ஏனெனில், அதுவே உங்கள் அறிவின் ஊற்றுக்கண்.

• பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்கவும்; ஏனெனில், அதுவே பூமியில் மனிதனுக்கு மன அமைதி அளிக்கும் பெரும் கிரியா ஊக்கி.

• அன்பு செலுத்தவும், செலுத்தப்படவும் நேரம் ஒதுக்கவும்; ஏனெனில், இறை நம்பிக்கை என்பது அன்பும், வெறுப்பும் சார்ந்தது. (இறைவனும், அவன் தூதரும் விரும்பியவற்றின் மீது விருப்பம் கொள்வது அன்பு; தடுத்தவற்றை விட்டு விலகுவது வெறுப்பு)

• சிநேகமாக இருக்க நேரம் ஒதுக்கவும்; ஏனெனில், அதுவே சந்தோஷத்தின் வழி.

• நகைச்சுவைக்கு நேரம் ஒதுக்கவும் ; ஏனெனில், அதுவே சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.

• பிறர் நலனில் அக்கறை காட்ட நேரம் ஒதுக்கவும்; ஏனெனில் வாழ்க்கை என்பது சுயநலம் என்ற குறுகிய வட்டத்திற்கு உட்பட்டதல்ல... பொது நலம் என் சிறப்பின்பாற்பட்டது.

• பணி / வேலை செய்ய நேரம் ஒதுக்கவும், ஏனெனில் அதுவே உங்கள் வெற்றியின் திறவு கோல்.

ஆனால், என்றுமே நேரத்தை வீண் செயல் / பேச்சில் கழிக்க வேண்டாம்.

2. எந்தவொரு நண்பரையும் முன்கூட்டி தகவல் தெரிவிக்காது அல்லது அனுமதி பெறாது சென்று சந்திக்க வேண்டாம்.

3. எப்பொழுதும் உங்களுடன் சிறிய கையேடு மற்றும் பேனா வைத்து இருங்கள். அதனால், உங்களுக்கு திடீரென்று தோன்றக்கூடிய எண்ணங்களை / யோசனைகளை அதில் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

4. உங்களுடைய வேலைகளுக்கிடையில் ஓய்வு நேரங்களை திட்டமிடுங்கள். எவ்வாறெனில் ஒய்வு நேரமும், தொழுகை நேரமும் ஒன்றாக இருக்க வேண்டும்.

5. உங்களுக்குக் கிடைக்கும் உபரியான ஓய்வு நேரங்களை புத்தகம் படிப்பது, குர்ஆன் மனனம் செய்வது போன்ற பயனுள்ள காரியங்களுக்குப் பயன்படுத்தவும்.

6. நீங்கள் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்தால், அவருக்கு சந்திக்கும் நேரத்தை தெளிவாக தெரிவிக்கவும்.

7. நீங்கள் தூரமான வெளியிடங்களுக்கு செல்லும் போது, சரியான நேரத்திற்குச் செல்லும் பொருட்டு, இடையில் எதிர்பாராது ஏற்படும் தடங்கல்களையும் கணக்கில் கொண்டு, குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது முன்னதாக கிளம்புவது சாலச் சிறந்தது.

8. எந்த ஒரு வேலை செய்வதாக இருந்தாலும், உதாரணமாக சமையலோ, கட்டுரை எழுதுவதோ அல்லது உரை நிகழ்த்துவதோ அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும், பொருட்களையும் முன் கூட்டியே தயார் செய்து வைப்பது மிகவும் சிறந்தது.

9. எந்தவொரு நோக்கமோ, பிரயோஜனமோ இன்றி பேசுபவர்களைத் தவிர்ப்பது நேரம் வீண் விரயமாவதைத் தடுக்கும்.

10. தொலைபேசி மூலமோ அல்லது கடிதம் மூலமோ செய்து முடிக்க வேண்டிய காரியத்தை அல்லது பிறருக்கு தெரிவிக்க வேண்டிய செய்தியை, எக்காரணம் கொண்டும் பயணம் மேற்கொண்டு செய்வது நேரம் வீண் விரயமாகும்.

11. எதிர்பாராத செலவுகளுக்கு முன்னேற்பாடாக சில்லறை நாணயங்களைக் கையில் எப்பொழுதும் வைத்திருப்பது சிறந்தது.

12. உங்கள் வீட்டிற்கு மளிகை சாமான்களோ அல்லது அலுவலகத்திற்குத் தேவையான பொருட்களோ வாங்க வேண்டியிருப்பின் முதலில் தேவையான பொருட்களை பட்டியலிட்டு, சரிபார்த்தபின் செல்லவும். ஏனெனில், சிலவற்றை மறந்துவிட்டு மீண்டும் செல்வதை இது தவிர்க்கும்.

அழைப்புப்பணி பயிற்சிக் கையேடு

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான்னிர் ரஹீம்

முன்னுரை :

அல்லாஹ் மனிதனுக்கு அளித்துள்ள அளப்பரிய நன்மைகளில் - நற்பேறுகளில் சிந்திக்கும் திறன் கொண்ட மூளையே மிகச் சிறந்த நற்பேறாகும். எனினும், மருத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வு ''மனிதன் தன் மூளையை கால் பகுதிக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறான்"", என்ற உண்மையை நமக்கு உணர்த்துகிறது.

பயிற்சியின் நோக்கம் :

• கலந்து கொள்ளும் சகோதரர்களிடம் அவர்களுக்கே தெரியாது அவர்களிடம் மறைந்துள்ள - புதைந்துள்ள, திறமைகளை - ஆற்றல்களை - சக்திகளை வெளிக்கொணர்வது.
• தங்களால் என்னென்ன சாதிக்க முடியும் என்பதை கலந்து கொள்ளும் சகோதரர்கள் அறிந்து கொள்ள துணைபுரிவது.
• கலந்து கொள்ளும் சகோதரர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் மேன்மேலும் மேம்படுத்த உதவுவது.

''மனிதர்கள் தங்களைத் தாங்களே மாற்றி - திருத்திக் கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் நிலைமைகளை மாற்ற மாட்டான்.” (அல்குர்ஆன் சூரா ரஃது 13: வசனம் 11)

தாவா” பயிற்சி வகுப்பு - பாடத் திட்டம்

முதல் வாரம்
திருக்குர்ஆன் வசனம் ஏதேனும் ஒன்றைக் குறித்து விளக்கவுரை - அரபி மூலத்துடன்.

இரண்டாவது வாரம்
நபி முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு சம்பவத்தை குறித்து பேசுவது மற்றும் அதிலிருந்து நாம் பெறும் படிப்பினையைக் கூறுவது.

மூன்றாவது வாரம்
பிறமத நண்பர்கள் இஸ்லாம் குறித்து கூறும் தவறான குற்றச்சாட்டுகள், ஐயங்களுக்கான பதில்.

நான்காவது வாரம்
மாதாந்திர தேர்வு.

ஐந்தாவது வாரம் (இருக்குமேயானால்)
ஏதேனும் ஒரு தலைப்பில் ஐந்துநிமிடம் திருக்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பேசுவது.

_______________________
பயிற்சி வகுப்பின் விதிகள்

(1) பேசுபவர்கள் திருக்குர்ஆன், மற்றும் ஹதீஸ் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக பேச வேண்டும்.

(2) வகுப்பில் மொபைல் தொலைபேசியை Switch Off செய்ய வேண்டும் / Mute Mode-ல் வைத்திருக்க வேண்டும்.

(3) தொடர்ந்து மூன்றுவகுப்பிற்கு வராதவர்கள் பெயர் நீக்கப்படும்.

(4) கொடுக்கப்பட்ட தலைப்பில் குறித்த நேரத்தில் பேசி முடிக்க வேண்டும்.

(5) வகுப்பின் இடையில் பேசுவது, சலசலப்பு ஏற்படுத்துவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

(6) ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிடுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். அவருடைய பேச்சில் ஏதேனும் தவறு இருக்குமாயின், அவர் பேசி முடித்த பின் வகுப்பு ஆசிரியரின் அனுமதி பெற்று பேச வேண்டும்.

(7) வகுப்பிற்கு வருமுன்பே அன்றைய பாடத் திட்டத்தின்படி தயார் செய்து வரவேண்டும். மற்றவர் பேசிக் கொண்டிருக்கையில் வகுப்பில் அமர்ந்து, அவர் பேசுவதை கேட்காமல் அவசர தயாரிப்பில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

___________________

Saturday, March 26, 2005

இஸ்லாம் - பிற வேதங்களில்...

மனித சமுதாயம் ஒரே இனமாக இருக்கும்போது, நாம் ஒருவரை யொருவர் நன்றே புரிந்து கொண்டுள்ளோமல்லவா? மனித இனம் முழுமைக்கும் இறைவன் கூறுகிறான்:

''உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நான் இன்று முழுமையாக்கிவிட்டேன். மேலும், நான் உங்கள்மீது என்னுடைய அருட்கொடையை முழுமையாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுங்கள். (அல் குர்ஆன்: 05:03)

1.ஏகத்துவம்: (மனித குலத்திற்கு ஒரே இறைவன்)

''அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை"" என்று (நபியே நீர்) கூறும்! (அல் குர்ஆன்: 112:1-4)

“ இந்த முக்குணங்களால் மயங்கி, மெய்ப்பொருளும் அழியா பொருளுமாகிய என்னை உலகம் காண்பதில்லை” (பகவத் கீதை 7:13)

“ என்னுடை யோக மாயயால் நான் மக்களின் கண்களுக்கு மூடப்பட்டு நிற்கிறேன். நான்தான் பிறப்பும் அழிவும் அற்ற பரம்பொருள் என்பதை அறிவற்றோர் அறியமாட்டார்கள்" (பகவத் கீதை 7:25)

"இறைவன் ஒரே ஒருவன் தான்! அவனை அட்டுமே வழிபடுங்கள்"
(ரிக் வேதம் 6:45:16)


‘இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவராகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.’ (உபாயம் 6:4)

கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (மாற்கு 12:29)
மேலும் கான்க: உபாகமம் 5:7-9, 6:4 யோவான் 5:37


2. தூதுத்துவம்:

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு புதிய தூதர் அல்ல. மாறாக அவரே இறைவனின் இறுதித் தூதராவார். முஹம்மத்(ஸல்) உங்கள் ஆடவர் களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால், அவரோ இறைவனின் தூதராகவும் தூதர்களுக்கெல்லாம் இறுதியானவராகவும் இருக்கிறார். அல் குர்ஆன் (33:40, 37:37, 16:36, 10:47, 13:7, 35:24, 13:38, 4:164, 40:78)

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பு:
முஹம்மத் என்னும் பெயரில் அந்நிய நாட்டிலிருந்து ஒரு ஆச்சாரியார் தன்னுடைய சீடர்களுடன் வருவார். (பவிஷ்யபுரானம் 3:3:3:5)

இன்னும் அனேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதா யிருக்கிறது, அவற்றை நீங்கள் இப்போழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய் பேசாமல், தாம் கேள்வி பட்டவை யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப் படுத்துவார். (பைபிள் யோவான் 16:12…4) மேலும் காண்க: உபாகமம் 18:18,19 யோவான் 14:7,8)

3. மறுமை கோட்பாடு:

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆகவேண்டும். அன்றியும் இறுதி தீர்ப்பு நாளில்தான் உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும். எனவே, நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவரே வெற்றியடைவார். (அல் குர்ஆன் 3:185, 99:7-8, 67:2.)

நீ போரில் கொல்லப்பட்டால், சுவர்க்கம் அடைவாய். (பகவத்கீதை 2:37)

விவஸ்தை கெட்டுப்போன குலமும், கெட்டுப்போக செய்தவர்களும் நரகத்தை அடைவார்கள். (பகவத்கீதை 1:41)

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்து போடு. உனது சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயங்களில் ஒன்று கெட்டுப்போவது உணக்கு நலமாயிருக்கும். உன் வலதுகை உணக்கு இடரலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு! உனது சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயங்களில் ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும்.
(மத்தேயு 5:29 மாற்கு 9:43-47)


முடிவுரை:

உண்மையில் இது (திருக்குர்ஆன்) ஒரு நல்லுபதேசமாகும். எனவேää
விரும்புகிறவர் தம்முடைய இறைவனின் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். (அல் குர்ஆன் 76:29)


இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வகையான நிர்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் பிரிந்து தெளிவாகிவிட்டது. (அல் குர்ஆன் 2:258)

திருக்குர்ஆன் இறை வேதமாகும் இதில் சிறிதும் சந்தேகமில்லை.

இஸ்லாத்தில் இல்லை - கட்டாய மதமாற்றம்!

அரங்கு முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் அவர்களில் முஸ்லிம்கள் சிலர் மட்டுமே! மற்றவர்கள் சகோதர சமுதாயத்தவர்கள்.

தொலைக்காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது.

கல்லூரி மானவர்கள், குறிப்பாக முஸ்லிமல்லாத மாணவர்கள் இஸ்லாம் தொடர்பாக எந்தக் கேள்வியும் கேட்கலாம். புகழ்பெற்ற மார்க்க அறிஞர் ஒருவர் அவர்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார். நிகழ்ச்சி (படப்பிடிப்பு) தொடங்கியது. பார்வையாளனாக நானும் ஒரு ஓரத்தில்…!

மாணவர் ஒருவர் எழுந்து வினா ஒன்றை தொடுத்தார்.

''என்னுடைய கேள்வி சற்றுக் கடுமையாக இருக்கும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. விளக்கம் பெறவே இந்த கேள்வி. மதமாற்றத்தை இஸ்லாம் விரும்புகிறதா? கட்டாயமாக பிறரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுங்கள் எனக் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதாமே? இது ஏன்? இது சரியா? என்று படபட வென வினாக்களை பொழிந்து விட்டு அந்த மாணவர் அமர்ந்தார்.

விளக்கம் சொல்ல எழுந்த அறிஞரின் முகத்தில் வசீகர புன்னகை.

நண்பர் ஓர் அருமையான கேள்வி கேட்டுள்ளார். போலித்தனமோ, பாசாங்கோ இல்லாமல் அவர் வெளிப்படையாகத் தன் மனதில் இருப்பதைக் கேட்டுள்ளார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். மதமாற்றம் குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டத்தினைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

''நான் குர்ஆனை முழுமையாக ஓதி உணர்ந்தவன்…! குர்ஆனில் எந்த ஓர் இடத்திலும் 'கன்வர்ட்" (Convert) மதம் மாற்றுதல் எனும் சொல்லே இல்லை. ஆனால் 'கன்வே" (Convey) எடுத்துரைத்தல், அறிவித்தல் எனும் சொல் பல இடங்களில் உள்ளது.

இஸ்லாத்தின் கொள்கைகளை பிறருக்கு எடுத்துரைக்கலாம். ஆனால் மதம் மாறும்படி வர்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.

"மார்க்கத்தில் எந்த கட்டாயமும் இல்லை, தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது." என்று அல் குர்ஆன் 02:256 கூறுகிறது.

அருள்மறை குர்ஆன் மற்றோர் இடத்தில் அழகாகக் குறிப்பிடுகிறது.

''உலகிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டு கீழ்படிந்தவர் களாகவே இருக்க வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் இப்பூமியில் உள்ள அனைவருமே நம்பிக்கை கொண்டிருப் பார்கள். அப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையாளர்கள் ஆகிவிட வேண்டும் என்று நீங்கள் அவர்களை கட்டாயப் படுத்துவீர்களா?" (அல் குர்ஆன் 10:99)

ஆகவே வற்புறுத்தல், கட்டாய மதமாற்றம் என்பது கடுகளவும், கடுகின் முனையளவும் இஸ்லாத்தில் இல்லை. அதே சமயம் மார்க்கத்தின் அடிப்படைகளை ஓரிறைக் கொள்கை, தூதுத்துவம் மறுமைச் சிந்தனை போன்றவற்றை மக்களிடம் எடுத்துரைப்பது முஸ்லிம்களின் கடமை. இஸ்லாத்தில் மனிதநேய கருத்துக்களை அது கூறும் சகோதர சமத்துவத்தைப் பிறருக்குப் புரியவைக்க வேண்டும். இறைவன் இருக்கிறான் என்பதற்கான சான்றுகளைச் சிந்தித்துப் பார்க்கும்படி சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படி தாமாக முன்வந்து நமக்கு விருப்பமான மதத்தை ஏற்கவும் பின்பற்றவும் நம்முடைய அரசியல் சாசனமும் அனுமதிக்கிறது.

அறிஞரின் இந்த விளக்கத்தை கேட்டதும் அந்த மாணவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். இஸ்லாம் குறித்து வெகுநாட்களாய் என் உள்ளத்தில் இருந்த தவறான கருத்து உங்கள் விளக்கத்தின் மூலம் நீங்கிவிட்டது. குர்ஆனின் பரந்த கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டேன்.

''அல்ஹம்துலில்லாஹ்- இறைவனுக்கே அனைத்துப்புகழும்"" எனக் கூறி அறிஞர் அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

___________________________________________________________________

மத மாற்றம் அல்ல! மன மாற்றம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


மனித சமூகத்தின் ஓர் மைல் கல் ராஜ்குமார் பிரகாஷ் என்னைப் பற்றி :

நான் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகரத்தில் பிறந்தவன். எனது தந்தை பெயர் சு. பக்கிரிசாமி பிள்ளை. தாயார் பெயர் அஞ்சம்மாள். நான் ஐந்து சகோதரிகளுடனும் மூன்று சகோதரர்களுடனும் பிறந்தவன். நான் என் குடும்பத்தில் எட்டாவது நபர். நான் இந்து மதத்தை சார்ந்து இருந்தேன்.

இந்து மதம் பற்றி :

இந்து மதம் பல நூறு ஆண்டுகளாக இந்தியாவிலும் நேபாளத்திலும் உலகல் இன்னும் பல இடங்களில் பரவி இருக்கிறது. மனு என்று அழைக்கப்படுகின்ற ஒருவரால் ‘மனு தர்மம்’ என்னும் நூல் இயற்றப்பட்டு அதில் கூறப்படுகின்ற பிரதானமான ‘வர்ணாசிரம கொள்கை’ கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்துகள் திராவிடர்கள் ஆரியர்கள் என அழைக்கப்பட்டனர். 600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட மனு தர்மம் வர்ணாசிரம கொள்கையை போதித்து இந்து மக்களிடத்தில் உயர்வு தாழ்வை ஏற்படுத்தி விட்டது. அதனால் பல நூறு ஜாதிகள் தோண்றியது. ஜாதிக்கு ஒரு கடவுள் என பல தெய்வக் கொள்கையும் தோன்றியது.

என் மனதில் ஏற்பட்ட மாற்றம்:

நான் 20 வயது கடந்த பிறகு கேரளாவில் இருக்கும் பிரசித்தி பெற்ற சபரிமலைக்கு சென்றேன். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து சென்ற அனுபவம் எனக்கு உண்டு. சபரிமலையில் தனித்தன்மையோடு விளங்கும் சபரி ஐயப்பன் விஷ்னு என்ற ஆணுக்கும் சிவன் என்ற ஆணுக்கும் பிறந்ததாக சொல்லப்படுவதை என் மனம் இயற்கைக்கு மாற்றமாக கருத துவங்கியது.

பழனிமலையில் இருக்கும் முருகன் ‘நவபாஷனம்’ என்று சொல்லப்படுகின்ற ஒன்பது வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளின் கலவையோடு உண்டாக்கபட்ட கற்சிலை. அந்த முருகன் சிலைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் தொடர்ந்து செய்து வந்த காரணத்தினால் முருகனின் சிலை உடைந்துவிடும் அபாயம் ஏற்பட்டதால் பழனி தேவஸ்தானம் சிறிய வெண்கல சிலை ஒன்று செய்து அதற்கு அபிஷேகம் செய்யம் மாற்று ஏற்பாடு செய்யலானார்கள். என் மனதில் ஏற்பட்ட ஐயம் தன்னை காப்பாற்றிக் கொள்ளாத முருகன் என்னை எப்படி காப்பாற்றுவான்?

அடுத்து சிலை வழிபாடு. மனிதனால் செதுக்கபட்ட சிலைகளுக்கு நாம் ஏன் வணக்கம் செலுத்த வேண்டும். அந்த சிலையை விட அந்த சிலையை தத்ரூபமாக செதுக்கிய சிற்பி மேலானவாக தோன்றியது.

நாத்திகம்:

கடவுள் என்று யாரும் இருக்கமுடியாது என்ற நாத்திகத்தின்பால் என் கவனம் திரும்பியது. உடனே என் மனம் நிச்சயம் ஒரு கடவுள் (Super Power) இருக்கத்தான் வேண்டும். இல்லையேல் இந்த பிரபஞ்சம் சீராக செயல்பட முடியாது என எண்ணியது. கடவுள் இல்லை, கடவுளை கற்பிப்பவன் முட்டாள் என்று உரத்து கூறிய ஈ.வே.ரா. பெரியார் நிலை என்ன ஆனது? இன்று அவருடைய சிலைக்கு மாலை மரியாதை. இதை இறந்துவிட்ட பெரியார் உணர்ந்து கொள்வார் என என் மனம் ஏற்க மறுத்தது.

கிறிஸ்துவம் :

என் மனம் கிறிஸ்துவத்தின்பால் சென்றது. கிறிஸ்துவத்தின் இருபிரிவுகள் ஒன்று இயேசுவையும் மற்றொன்று இயேசுவின் தாயார் மர்யத்தையும் வணங்கி வரலாயினர். ஒருவன் தவறு செய்தவிட்டு பாதிரியிடம் சென்று பாவமன்னிப்பு பெறக்கூடிய நிலை மனிதனை பாவத்தில் இருந்து மீட்காமல் திரும்பத் திரும்ப செய்ய வழிவகுக்கிறது என என் சிற்றறிவுக்குப்பட்டது. இங்கு சிலை வணக்கம் என் மனதை நெருடியது.

இஸ்லாம் :

சிலைவழிபாட்டில் திருப்தி இல்லாத என் மனதிற்கு இஸ்லாம் சிலை வழிபாட்டை ஒழித்துவிட்டதை கண்டு ஆனந்தம் அடைந்தேன். இஸ்லாத்தில் தொழுகையில் உணவு உண்ணும் நிலை இன்னும் பல சூழலில் சகோதரத்துவம் வெளிப்பட்டது. முஸ்லிம்களிடையே சமத்துவம் நிலவியது. சாதிகள் இல்லை. அதனால் சாதி சண்டைகளும் மனித படுகொலைகளும் இல்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் திருத்தூதர் அன்றி இறைவனின் குமாரர் இல்லை. இந்த கொள்கைகள் என்னை இந்து மதத்தில் இருந்து வெளிப்படுத்தி நாத்திக கிறிஸ்துவ கொள்கைகளுக்குச் செல்ல துடித்த மனதிற்கு ஒரு கடிவாளமிட்டு ‘இஸ்லாம்’ மார்கத்தின்பால் என்னை அழைத்து வந்தது. எனது 25-ம் வயதில் ஷார்ஜா நகரில் நான் இஸ்லாத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

மன மாற்றம் :

இஸ்லாம் ஓர் மதம் அல்ல. அது ஒரு மார்க்கம் மனித வாழ்க்கை சீர்படுத்த உகந்த வாழ்க்கை நெறி. அதனால் நான் மதமாற்றம் செய்யப்படவில்லை. மனமாற்றமே அடைந்தேன். இஸ்லாம் வாழ்வில் ஒரு மனிதன் சந்திக்கும் அனைத்து விசயங்களுக்கும் தீர்வு சொல்கிறது. குர்ஆனில் புதைந்து கிடக்கும் பல அறிவியல் உண்மைகள் இந்த வேதம் நிச்சயமாக தீர்க்கதரிசி முஹம்மது(ஸல்) அவர்களால் வழங்கப்பட்டது அல்ல. இது ஓர் இறைவனின் தெளிவான வழிகாட்டுதல் என விளங்க முடிந்தது.

முஸ்லிம்கள் பற்றி :

இஸ்லாம் கூறக்கூடிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி நடப்பவர்கள் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் துரதிருஷ்டவசமாக பல முஸ்லிம்கள் இஸ்லாத்தின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக நடப்பதை பார்க்கிறோம். தமிழ்கூறும் சகோதர சகோதரிகளுக்கு நான் அன்போடு தெரிவித்துக் கொள்வது என்றவென்றால் நீங்கள் இஸ்லாத்தைப் பாருங்கள். இஸ்லாமியரைப் புரிந்து கொள்ள முயல வேண்டாம். நீங்கள் ஓர் இறையின் புனித வேதமான அல்குர்ஆனையும், முஹம்மது(ஸல்) அவர்களின் பொன் மொழிகளாகிய ஹதீஸையும் படித்து ஆய்வு செய்து உங்கள் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஆக்கிக் கொள்ள வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றேன்.

அன்பான வேண்டுகோள் :

முஸ்லிம் சகோதர சகோதரிகளே! இனியாவது இஸ்லாத்தை அனைத்து அம்சங்களிலும் பின்பற்றி நடப்போமாக! இன்னும் மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு இந்த புனித பணியை அதாவது அழைப்புப்பணியை துரிதமாக செய்வோமாக என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அப்துர் ரஹ்மான் (ராஜ்குமார் பிரகாஷ்)
திருவாரூர்

Thursday, March 24, 2005

தாஃவா – அழைப்புப் பணி!

இறைவனின் திருப்பெயரால்

தாஃவா – அழைப்புப் பணி

இன்று உலகில் எண்ணற்ற மக்கள் வாழ்க்கையில் வெறுப்புற்று, நம்பிக்கையிழந்து, நிம்மதியின்றி அமைதியை தேடி ஓடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு அமைதி கிடைத்தபாடில்லை. ஏனென்றால் அவர்கள் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்காதவரை அமைதி பெறமாட்டார்கள். முஸ்லிம்கள் தங்களுடைய முழு முதற்கடமையை செய்யத்தவறியதன் விளைவே இது. தாஃவா – அழைப்புப்பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை.

தாஃவா என்பது மக்களை அல்லாஹ்வின் பால் அழைப்பது. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்வது. அவன் காட்டித்தந்த சீரிய வழியின்பால் வாழ்வது, தீமை மற்றும் இணைவைப்பதைவிட்டும் முற்றிலுமாக விலகுவது ஆகும்.

இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் - சுரத்துல் அன்பியா – நபிமார்கள் குறித்த அத்தியாயம் 21:வசனம் 25

“(நபியே!) உமக்கு முன்னர் இப்பூவுலகில் வாழ்ந்த நம் தூதர்கள் அனைவரும் உமக்கு வஹீயாக கிடைத்த அதே செய்தியையே அவர்களும் பெற்றார்கள். அதாவது “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை ஆகவேää அவனுக்கே முற்றிலும் வழிபட்டு நடங்கள்”

எனவே, தாஃவா என்பது மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில் சரியான மொழியில் அவர்கள் திருப்தி கொள்ளுமாறு அமைய வேண்டும். மேலும், அவர்கள் மேல் உள்ள அன்பின் காரணமாக அவர்களும் நம்மைப் போன்று நேர்வழியல் சென்று நாளை மறுமையில் நம்மருகே செர்க்கத்தில் இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் தாஃவா செய்ய வேண்டும்.

இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் சுரத்துன் நஹல் - தேனீக்கள் பற்றிய அத்தியாயம் 16:வசனம் 125

நபியே நீர் மனிதர்களை விவேகத்தைக் கொண்டு மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் பக்கம் அழைப்பீராக - அன்றியும் எது அழகானதோ அதைக் கொண்டு நீர் அவர்களுடன் விவாதம் செய்வீராக!

மேலும் சுரத்துல் ஃபுஸ்ஸிலத் அத்தியாயம் 41:வசனம் 33ல் இறைவன் கூறுகின்றான்

அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்துää நல்ல அமல்களை செய்துää “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களில் நின்றும் உள்ளேன்” என்று கூறுகிறாரோ அவரை விட அழகிய சொல் சொல்பவர் யாருமில்லை

ஆகää இந்த தாஃவா பணியை தனிநபராகவோ அல்லது கூட்டமைப்பாகவோ இருந்து செய்யலாம். தனிநபராக இருந்து செய்வது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால்ää அந்நபர் இஸ்லாம் குறித்த தெளிவான அறிவு பெற்றவராக இருத்தல் வேண்டும். கூட்டமைப்பாக செய்பவர்கள் ஒரு அழைப்பு மையத்தை இஸ்லாமிய அறிஞர்கள்ää ஆராய்ச்சியாளர்கள்ää சமூகவியாலர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு அமைக்க வேண்டும். அவர்கள் சொற்பொழிவுகளுக்குää விவாதங்களுக்குää ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு வருடம் முழுவதுமுக்குரிய செயல்களை வகுத்து ஒரு செயல் திட்டம் ஏற்படுத்த வேண்டும். பிற சமயத்தவர்கள் மற்றும் பிறபகுதியிலுள்ள அழைப்பாளர்கள் எந்நேரமும் அணுகி தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக செயல்பட வேண்டும். புத்தகங்கள்ää ஆடியோää வீடியோ கேஸட்;டுகள் கொண்ட நூலகம் ஏற்படுத்த வேண்டும்.

தாஃவாவின் முதல் பணியாக கலிமா ஸலவாத்தை எடுத்துரைக்க வேண்டும்.

வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தூதராகவும், நல்லடியாராகவும் உள்ளார் என்பதாகும்.

முதலில் கூறவேண்டியது:
1) அல்லாஹ் இருக்கின்றான், அவன் தனித்தவன் (இணைதுனையற்றவன்), அவன் பண்புகள்
2) முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மை, உண்மை
3) திருக்குர்ஆன் கூறும் விஞ்ஞான அற்புதங்கள், எவ்வாறு அவை பிற்காலத்தில் நிரூபிக்கபட்டன அது உலக மாந்தருக்கு விடும் சவால் 'இது போன்ற புத்தகத்தை உங்களால் இயற்ற முடி யுமா?" என்பது
4) மறுமை நாள், மறுமைய வாழ்க்கை, மீண்டும் அனைவரும் உயிர்தெழுப்பப்படுவது, நியாய தீர்ப்பு வழங்குவது
5) முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்களின் தோழர்களுடைய சிறப்புகள்ää தியாகங்கள்
6) இஸ்லாமிய வாழ்க்கை முறைää அன்றாட பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள்
7) இஸ்லாம் உலகில் ஏற்படுத்திய புரட்சி, தாக்கம்

• சர்ச்சைக்குரிய விசயங்கள்ää அரசியல்ஈ மற்றும் முஸ்லிம்கள் நம் நாட்டில் படும் துன்பங்கள குறித்தெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது
• நாம் அறியாத விசயங்கள் குறித்து பேசுவதும் கூடாது
• நாம் கூற விரும்புவதை தெளிவாக அழகிய முறையில் எடுத்துக் கூறவேண்டும்.
• நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும்
• நல்லமுறையில் அவர்களிடம் விவாதம் செய்யவேண்டும். நாம் அளிக்கும் பதில் அவர்களை திருப்தி செய்யுமாறு இருக்க வேண்டும்
• தவறுகளை பொறுக்க வேண்டும். பொறுமையோடு அவர்கள் கூறுவதை செவிமடுக்கவேண்டும்
• குர்ஆன் மற்றும் புத்தகங்களை பரிசாக அளிக்கவேண்டும்
• வீண் விமர்சனங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும்
• இஸ்லாத்தை மற்றும் நம்மை பிறர் ஏசினால் பொறுமை காக்கவேண்டும்
• உங்கள் சொற்பொழிவில் முரண்பாடு இருக்கவே கூடாது
• நீங்கள் கூறுபவற்றை நீங்கள் பின்பற்றுபவராக இருக்க வேண்டும். உதாரணம்: தாடி
• வாக்கு தவறாமை கடைபிடிக்கவேண்டும்
• நாம் அறியாத விசயங்களைக் குறித்து கேட்கப்பட்டால் எதையேனும் கூறி அவர்களை குழப்புவதை விட்டுவிட்டு 'எனக்கு தெரியாது படித்துவிட்டு கூறுகிறேன்" என்று கூறுவதே நேர்மையான சிறந்த பதிலாகும்.


இஸ்லாம் குறித்து பிற சமயத்தவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை இங்கு கூற விரும்புகிறேன்.

1. இஸ்லாம் என்பது முற்றிலுமாக அல்லாஹ்விற்கு அடிபணிவது
2. அல்லாஹ் என்பது 'ஒரே கடவுள்" என்பதற்குரிய அரபிச் சொல். அவன் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாது உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் இறைவன் ஆவான்.
3. இஸ்லாம் முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கம் அல்ல. ஆதி மனிதர் ஆதம்(அலை) முதல்ää முதல் நபி நூஹ்(அலை) தொடர்ந்து வந்த அனைத்து தூதர்களும் போதித்த மார்க்கம் ஆகும்
4. இஸ்லாம் என்பதன் உண்மையான அர்த்தம் சாந்திää மற்றும் சமாதானம் என்பது குறித்து எடுத்துக் கூறுவது
5. குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வாக்கு. மனித குலத்திற்கு அவன் அருளிய இறுதிச் செய்தி
6. இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லைää அனைவரும் சமம்
7. இஸ்லாம் எளிய மார்க்கம்ää சகிப்புத் தன்மையை வலியுறுத்துகிறது.
8. தனிமனித உரிமைகளை இஸ்லாம் பேனுகிறது. நியாயத் தீர்ப்பு நாளின் முக்கியத்துவம் - ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது
9. இஸ்லாம் மனிதனின் உடல்ரீதியான வெளிப்படையான பிரச்சனைகளுக்கும் உள்ள ரீதியான ஆன்மீகப் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது
10. சில சமூகää நாட்டில் நிலவும் பழக்க வழக்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை
11. இன்றைய சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளான வறுமைää வன்முறைää வீடற்றோர்ää கொலைää கொள்ளைää பாலியல் நோய்கள்ää மனைவியை துன்புறுத்துவதுää குழந்தைகளை வதை செய்வதுää குடிää போதைää விபச்சாரம் மற்றும் குடும்பத்தில் பிளவு போன்ற அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் தீர்வு தருகிறது
12. பெண்களுக்கு தனி அந்தஸ்துää கௌரவம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப் பட்டுள்ளது. பெண்கள் குறித்து ஒரு தனி அத்தியாயமே உள்ளது

சு10ரா முஹம்மது(ஸல்) அத்தியாயம் 47: வசனம் 38

அவனுடைய கட்டளைகளை நீங்கள் புறக்கணிப்பீர்களானால் உங்களை அழித்து உங்களையல்லாத வேறு சமூகத்தாதை உங்கள் இடத்தில் அவன் மாற்றிவிடுவான். பின்னர் அவர்கள் உங்களைப் போன்றவராக இருக்கமாட்டார்கள்.

தாஃவா செய்யும் முறைகள்ää உத்திகள் என்னவென்றால்

1. சிறு சிறு பிரசுரங்கள் பல்வேறு தலைப்புகளில் வெளியிடுவது. WAMI, Saudi வெளியிட்டது போன்று. இது போன்ற பிரசுரங்கள் வெளியிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம், வார்த்தைகள் அரபியில் இல்லாது அந்தந்த மொழியில் இருத்தல் வேண்டும். உதாரணம் - அல்லாஹ் - இறைவன், ஈமான் - நம்பிக்கை, தக்வா - இறையச்சம், பயபக்தி, நிக்காஹ் - திருமணம், நபி - இறைத்தூதர்
2. புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் வெளியிடுவது
3. பிரசுரங்கள், புத்தகங்களை கிறித்துவர்கள் போன்று நாமாக சென்று பேருந்து நிலையம், இரயில் நிலையம், ஜன நடமாட்டம் உள்ள மார்க்கெட் போன்ற இடங்களில் விநியோகிப்பது
4. புத்தகத்திருவிழா - Book fair-ல் ஒரு கடையைப் பிடித்து விலை கூடுதலாக உள்ள இஸ்லாமிய புத்தகங்களை சலுகை விலையில் விற்பது – சில சிறு புத்தகங்களை இலவசமாக அளித்து வாங்கத் தூண்டுவது.
5. தெருமுனைப் பிரச்சாரம் - தி.க, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் போன்று சிறிய நாற்காலியில் மெகா போனுடன் பிரச்சாரம் செய்வது - குறிப்பாக ஜனநடமாட்டம் உள்ள இடங்கள் மற்றும் ஏழை மக்கள் (தலித்) வாழும் சேரிகளில் நடத்துவது
6. ஈத் பெருநாளை முன்னிட்டு பிற சமுதாயத்தவரை அழைத்து விருந்து பரிமாறி பிரசங்கம் செய்வது, கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்துவது
7. மீலாது நபி விடுமுறையை பயன்படுத்தி முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்களைப்பற்றி எடுத்துக் கூறுவது
8. கேபிள் டிவி நெட்வொர்க்கை பயன்படுத்தி தினமும் இஸ்லாமிய சொற்பொழிவு கேஸட்டுகளை ஒளிபரப்புவது - Dr.Zakir Naik மும்பையில் செய்வது போன்று.
9. ரமளான் மாதத்தில் அனைத்து இயக்கத்தினரும் தனித்தனியாக ஸஹர் நேரத்தில் ஒளிபரப்பாது, மதியம் ஒன்று இரவு ஒன்று என இஸ்லாமிய ஒளிபரப்பு - குறைந்தபட்சம் அரை மணி நேரம், விளம்பரம் எதுவும் இடையில் இல்லாது, இயக்கப் பெயர், தனிநபர் பெயர் இல்லாது நடத்துவது
10. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பிற சமுதாயத்தவரை அழைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துவது
11. வருடம் ஒரு முறை அல்லது இருமுறை இரத்ததான, மருத்துவ முகாம் ஏற்பாடு செய்துää அந்நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு சமயத்தவர்களை அழைத்து, அதில் பிரசங்கம் செய்துவிட்டு நிகழ்ச்சியை நடத்துவது
12. மாதந்தோறும் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு சென்று கிறித்துவர்கள் போன்று நோயாளிகளை நலம் விசாரித்து ஆறுதல் கூறி பிரச்சாரம் செய்வது
13. இயற்கை சீற்றங்களால் மக்கள் அவதிப்படும் நேரம் அங்கு முஸ்லிம் என்ற அடையாளத்தோடு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப்பணிகளை மேற்கொள்வது. உதாரணம்- பூஜ், குஜராத் பூகம்ப நிவாரணம் - முஸ்லிம் இளைஞர்கள் இரத்த தானம், இந்துக்களுக்கு தாமாக முன்வந்து செய்ததன் விளைவு - தொழுகை நடத்த விடாமல் தடுக்கப்பட்ட பள்ளிவாசல் இந்துக்களால் முஸ்லிம்களுக்கு திறந்து விடப்பட்டது.
14. முக்கிய செய்தித்தாள்களில் வாரம் ஒரு முறை முக்கிய தலைப்பின்கீழ் ஹதீஸ்களை வட்டார மொழியில் ஒரு தலைப்பின் கீழ் முதல் பக்கத்தில் வெளியிடுவது - உதாரணம் தினமணி - IFT வெளியீடு
15. ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொது பெயரில் நூலகம் ஒன்றை ஏற்பாடு செய்து இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் பொது புத்தகங்களை அனைவரும் (அனைத்து கமயத்தவரும்) வந்து படிக்குமாறு ஏற்பாடு செய்வது. உதாரணம் - சகோ. அபுஆஸியா நாகர்கோவிலில் “The Truth" என்ற பெயரில் நூலகம் திறந்து உள்ளார்.


Coming Soon...

Monday, February 14, 2005

அழைப்பு

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட / அறிவித்திட வலு சேர்க்கும் ஓர் வலைப்பதிவு இது.

Saturday, January 01, 2005

அழகியவர் யார்?

41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து ''நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?"" (இருக்கின்றார்)