அழைப்பு!

Friday, April 15, 2005

தினசரி வாழ்வின் ஒழுங்கு முறைகள்

அன்றாட - தினசரி வாழ்வின் ஒழுங்கு முறைகள்!


இஸ்லாம் நற்பண்புகளை, நற்குணங்களைப் பேண வேண்டும் என மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றது.

அல்லாஹ் தன் திருமறையில் ஒழுக்க மாண்புகள் பற்றித் தெளிவாகக் கூறுகின்றான்.

உதாரணம் அல்குர்ஆன் சூரா முதஸ்ஸிர் 73 : 4 - 5 ''நபியே! “ உம் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக. மேலும் அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக.""

அல்குர்ஆன் சூரா பகரா 2 : 43-44 “(மனிதர்களே) தொழுகையை நிலைநிறுத்துங்கள். மேலும்“ஏழைகளுக்கு ஜகாத் என்னும் நிதியை வழங்குவீராக”.

அல்குர்ஆன் சூரா இஸ்ரா 17 : 24“ “உம் பெற்றோருக்கு பணிவிடை செய்வீராக”.

நற்பண்புகள்
நற்குணங்களின் ஒட்டு மொத்த வடிவமாக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு அமைந்திருந்தது. அவர் தம் போதனைகளின் பெரும்பகுதி மனிதர்களிடம் நடந்து கொள்ளக்கூடிய ஒழுக்க மாண்புகளை மனித நேயத்தை வலியுறுத்துகிறது. ஏழைகளுக்கு பொருள் உதவி செய்தல் போன்ற வெளிப்படையான நற்பண்புகள் அல்லாது இன்ன பிற நற்பண்புகள் ஆகிய ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம், சீர்திருத்தம், மனித நேயம் மற்றும் அனைத்து நற்பண்புகளின் பிரதிபலிப்பாக ஒரு முஸ்லிமுடைய வாழ்வு இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமை அவனுடைய நற்பண்புகளையும்/ குணங்களையும் கொண்டே அடையாளம் காணப்பட வேண்டுமே தவிர பெயர் கொண்டு அல்ல.

I. தகவல் தொடர்பு பண்புகள் / ஒழுக்கங்கள்
1. எப்பொழுதும் புன்னகை புரிந்த முகத்துடன் இருக்கவும்; இறுக்கமான, கடுகடுத்த முகத்துடன் இருப்பதைத் தவிர்க்கவும்.

2. எப்பொழுதும் மென்மையாக உரையாடுங்கள்; குரலை உயர்த்திப் பேசுவதை தவிர்க்கவும்.

3. சத்தமின்றி மென்மையாகச் சிரியுங்கள்; பலத்த சப்தத்துடன் சிரிப்பதைத் தவிர்க்கவும்.

4. நிற்பவரிடம் எழுந்து நின்று பேசுங்கள் அல்லது அவரை அமருமாறு கூறுங்கள்; அவர் அமர்ந்த பின் நீங்கள் அமரவும்.

5. ஒருவரை சந்திக்கும் பொழுது ஸலாத்தைக் கொண்டு முந்துங்கள், இரு சந்தர்ப்பங்களில் தவிர (1) நீங்கள் அமர்ந்திருக்க, மற்றவர் உம்மை நோக்கி நடந்து அல்லது வாகனத்தில் முன்னேறி வந்தால். (2) நீங்கள் பிறருடன் சேர்ந்திருக்க, அவர் தனித்து வந்தால்.

6. ஸலாத்திற்கு உற்சாகமான, உபசரிப்பான, ஆர்வமான குரலில் முழு பதில் அளியுங்கள்.

7. பொது இடங்களில் கொட்டாவி விடுவதைத் தவிர்க்கவும். தவிர்க்க இயலாத பட்சத்தில் கை கொண்டு வாயை மூடவும்.

8. எப்பொழுதும் நேராக நிமிர்ந்து நில்லுங்கள். நீங்கள் தனித்து இருந்தால்; குனிந்தோ, சாய்ந்தோ நிற்கலாம்.

9. பேசுபவரின் உரையை(பேச்சை) கூர்ந்து, ஆர்வமுடன் கவனிக்கவும்.

10. கேட்கும் நபர் அல்லது கூட்டத்தினர் உம்முடைய பாலினமாக இருப்பின் அவர் முகத்தை நேருக்கு நேர் நோக்கிப் பேசவும்.

11. நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் மற்றவர் தும்மிவிட்டு “அல்ஹம்துலில்லாஹ்” எனக் கூறுவதை செவியுற்றால், நீங்கள் தவறாது “யர்ஹமுகுமுல்லாஹ்” எனக் கூறவும் (அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக.)

12. மற்றவரிடம் உம்மைப் பற்றி பெருமையாக கூறவேண்டாம். பிறருடைய குறைகளை அது உண்மையாக இருந்தபோதிலும் கூறுவதைத் தவிர்க்கவும்.

13. பேசுபவரை பாராட்டத் தவறாதீர்; இடையிடையே அவருக்கு இறைவன் கிருபை செய்ய துஆ செய்யவும்.

II. புறத்தோற்ற ஒழுக்கமாண்புகள்
1. சுத்தம் ஈமானில் ஒரு பகுதி ஆகும். எனவே, எங்கும் எப்பொழுதும் சுத்தமாக இருக்கவும். நாள்தோறும் குளித்து சுத்தமான ஆடையை அணியவும்.

2. தலை முடியை குறைத்தும், சீராகச் சீவி இருக்கவும் (ஆண்களுக்கு)

3. விரல் நகங்கள் நீண்டு, அழுக்குப் பிடிக்குமுன் அவற்றை வெட்டிவிட வேண்டும். ஒவ்வொரு வெள்ளியும் தொழுகைக்குச் செல்லுமுன் அவற்றை வெட்டுவது சிறந்தது. அடிக்கடி முகம், கைகளைக் கழுவி, வாய் கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும். தலை முடியை அடிக்கடி சீவிச் சீராக இருக்க வேண்டும். (ஆண்களுக்கு)

4. இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்கவும்.

5. உட்காரும் பொழுது கைகளை, கால்களை விரிக்காது சேர்த்து அமரவும்.

6. முகத்தை இறுக்கமாக, கடுகடுப்பாக வைக்காது, இயற்கையான தோற்றத்தில் புன்னகையோடு இருப்பது சிறந்தது.

7. உங்களுக்கு அதிகம் வியர்வை வெளியேறுமாயின், ஆல்கஹால் கலக்காத அத்தர் போன்ற நறுமணம் பூசவும் (ஆண்களுக்கு).

III. வகுப்பறை ஒழுக்கம்
1. வகுப்பு தொடங்குவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு வகுப்பறையில் நுழைந்து விடுங்கள். உங்களுடைய புத்தகம், நோட்டு, பேனா முதலியவற்றை தவறாது எடுத்து செல்லவும்.

2. நேராக நிமிர்ந்து அமரவும் - பேசுபவரின் முகத்தை நோக்கவும் - அங்குமிங்கும் பார்வை அலைவதைத் தவிர்க்கவும்.

3. ஆசிரியர் பாடம் நடத்தும் போது, நன்கு கவனித்து குறிப்பு எடுக்கவும். கூட அமர்ந்திருப்பவரிடம் பேசுவதைத் தவிர்க்கவும்.

4. பாடம் எடுப்பவரை இடைமறித்து பேச வேண்டாம். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கையை உயர்த்தவும். அனுமதி கிடைத்தால் பேசவும். அனுமதி தரப்படாதப் பட்சத்தில் அமைதியாக கையை கீழே விடவும். வகுப்பு முடிந்தவுடன் தனியே சந்தித்து கேட்கலாம்.

5. வகுப்பு முடிவடையும் நேரம் நெருங்கியவுடன் பரபரப்பு அடைய வேண்டாம். ஆசிரியர் வெளியே செல்லும் வரை அல்லது வகுப்பு முடிந்து விட்டது என ஆசிரியர் அறிவிக்கும் வரை வகுப்பை விட்டு வெளியேற வேண்டாம்.

6. எந்த ஒரு அமர்வு அல்லது கூட்டத்திலும் சாப்பிடுவதோ, குடிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் வழங்கினால் சாப்பிடவோ, குடிக்கவோ செய்யலாம்.

7. ஆசிரியரின் கருத்திற்கு நீங்கள் உடன்படவில்லையெனில் அதை மென்மையாக வகுப்பறையின் ஒழுங்கு கெடாமல் கூறவும்.

IV. உண்ணும் ஒழுங்குமுறை
1. உணவு உண்ண ஆரம்பிக்கும் முன் முகம், கைகளை கழுவி, வாய்க் கொப்பளித்து சுத்தம் செய்யவும்.

2. அனைவரும் உண்ண ஆரம்பித்த பின் நீங்கள் உண்ண ஆரம்பியுங்கள். அதற்கு பிறகு தாமதமாக யாரேனும் வந்து இடமின்றி தவித்தால், உங்களுடைய இருக்கையை சுருக்கி அவரை அமர வைக்கவும்.

3. அனைவருக்கும் கேட்கும் வண்ணம் 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்' எனக்கூறி உண்ண ஆரம்பிக்கவும்.

4. உங்களால் சாப்பிட முடிந்த அளவு மட்டும் தட்டில் எடுக்கவும், தேவை ஏற்படின் மீண்டும் சிறிது உணவு எடுத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், அதிக அளவு உணவு எடுத்து சாப்பிடமுடியவில்லை என தட்டில் மீதம் வைப்பது வீண் விரயமாகும்.

5. உணவை அப்படியே விழுங்கி விடாது, நன்றாக மென்று சாப்பிடவும்.

6. வலது கை கொண்டு உணவு உண்ணவும், நீர் அருந்தவும்.

7. கூட அமர்ந்திருப்பவர்களுக்கு உணவு பரிமாறி உதவுவது சிறந்தது. ஏதேனும் கூடுதல் பதார்த்தங்கள் எடுக்க எழுந்தால் அருகில் உணவு உண்பவர்களுக்கு ஏதேனும் வேண்டுமா எனக் கேளுங்கள்.

8. மேஜையில் பரிமாறப்பட்ட உணவு தவிர ஐஸ் கிரீம், ஸ்வீட் போன்ற, தனி தட்டில் வைத்துத் தரும் உணவு உங்களுக்கு வழங்கப்பட்டது எனத் தெரியாதவரை அதை உண்ண வேண்டாம். மேலும், உங்களுக்கு வழங்கப்பட்ட இது போன்ற உணவை அருகில் உள்ளவர் எடுத்துக் கொண்டால் அதை விட்டுவிட்டு வேறு ஒன்றை நீங்கள் பரிமாறுபவரிடம் கேட்டுப் பெறவும்.

9. நீங்கள் உணவு உண்டு முடித்து விட்டாலும், அனைவரும் முடிக்கும் வரை பொறுமையாக அமர்ந்து இருக்கவும்.

10. நீங்கள் உணவருந்திய தட்டையும், மேஜையையும் சுத்தமாக வைக்கவும்.

11. உணவருந்திய பின் அனைவரும் கேட்கும்; வண்ணம் "அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறி துஆ செய்யவும்.

12. உணவருந்திய பின் கைகளை கழுவி, வாய் கொப்பளித்து சுத்தம் செய்யவும்.

V. தூங்கும் முறை
1. இரவில் முன்னதாக உறங்கச் செல்லவும்.

2. தூங்குமுன் ஒளு செய்து கொள்ளவும்.

3. படுக்கும் முன் துவா செய்யவும்.

4. கடிகார அலாரம் அடித்தவுடன் எழுந்துவிடவும். அவ்வாறன்றி, சிறிது நேரம் மெத்தையில் படுத்து இருப்போம் என எண்ணி மீண்டும் படுத்தால் தூங்கி விடுவீர்கள். ஆகவே அதைத் தவிர்க்கவும்.

5. தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தவுடன் துஆ செய்யவும்.

6. பல் துலக்கி, ஒளு செய்து, ஆடைகளை சரியாக அணிந்து கொண்டு தொழச் செல்லவும்.

7. பஜ்ர் ஃ பர்ளு தொழுகைக்கு இகாமத் கூறுமுன் பள்ளியில் நுழைந்து விடவும்.

0 Comments:

Post a Comment

<< Home