அழைப்பு!

Friday, April 15, 2005

மேடை பேச்சிற்கான குறிப்புகள்

மேடை பேச்சிற்கான குறிப்புகள்

1. உரை தயாரிப்பு
2. தோற்றம் - உடை
3. சைகைகள் / சமிக்ஞைகள்
4. பார்வை
5. முகபாவனை
6. குரல் வளம்
7. ஒலி ஏற்ற - இறக்கம்
8. பார்வையாளரின் பிரதிபலிப்பு
9. நேரம் / கால அளவு
10. முன்னுரை
11. முடிவுரை

இஸ்லாமிய சேவை / தஃவா பணி / அழைப்பு பணி

இஸ்லாமிய சேவையின் முக்கியத்துவம்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''தனக்கு விருப்பமானதை தன் சகோதரருக்கும் விரும்பாதவரை யாரும் உண்மையான இறைநம்பிக்கையாளராக முடியாது''.

இஸ்லாமிய அழைப்பாளரின் பொறுப்பு
ஒரு இஸ்லாமிய அழைப்பாளர்; தன் சொந்த பொருளாதார ஆதாயத்தை விட தன் நேரம், செல்வம், சக்தி, ஆற்றல் ஆகிய அனைத்தையும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும், சமுதாயத்திற்கும் செலவிடுவதையே விரும்புவார், தேர்ந்தெடுப்பார்.

இஸ்லாம் தனிப்பட்ட முயற்சியை விட கூட்டு முயற்சியை, சேவையை ஆதரிக்கிறது.

''இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலை நிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர். மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாக) செலவு செய்வார்கள்''.அல்குர்ஆன் சூரா அஸ்ஸுரா 42:38

இஸ்லாமிய அழைப்பாளரின் பங்கு:
முஃமீனான ஆண்களும் முஃமீனான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதை செய்யத் தூண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகிறார்கள். தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்(ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் சூரா தவ்பா 9:71)

தினசரி வாழ்வின் ஒழுங்கு முறைகள்

அன்றாட - தினசரி வாழ்வின் ஒழுங்கு முறைகள்!


இஸ்லாம் நற்பண்புகளை, நற்குணங்களைப் பேண வேண்டும் என மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றது.

அல்லாஹ் தன் திருமறையில் ஒழுக்க மாண்புகள் பற்றித் தெளிவாகக் கூறுகின்றான்.

உதாரணம் அல்குர்ஆன் சூரா முதஸ்ஸிர் 73 : 4 - 5 ''நபியே! “ உம் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக. மேலும் அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக.""

அல்குர்ஆன் சூரா பகரா 2 : 43-44 “(மனிதர்களே) தொழுகையை நிலைநிறுத்துங்கள். மேலும்“ஏழைகளுக்கு ஜகாத் என்னும் நிதியை வழங்குவீராக”.

அல்குர்ஆன் சூரா இஸ்ரா 17 : 24“ “உம் பெற்றோருக்கு பணிவிடை செய்வீராக”.

நற்பண்புகள்
நற்குணங்களின் ஒட்டு மொத்த வடிவமாக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு அமைந்திருந்தது. அவர் தம் போதனைகளின் பெரும்பகுதி மனிதர்களிடம் நடந்து கொள்ளக்கூடிய ஒழுக்க மாண்புகளை மனித நேயத்தை வலியுறுத்துகிறது. ஏழைகளுக்கு பொருள் உதவி செய்தல் போன்ற வெளிப்படையான நற்பண்புகள் அல்லாது இன்ன பிற நற்பண்புகள் ஆகிய ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம், சீர்திருத்தம், மனித நேயம் மற்றும் அனைத்து நற்பண்புகளின் பிரதிபலிப்பாக ஒரு முஸ்லிமுடைய வாழ்வு இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமை அவனுடைய நற்பண்புகளையும்/ குணங்களையும் கொண்டே அடையாளம் காணப்பட வேண்டுமே தவிர பெயர் கொண்டு அல்ல.

I. தகவல் தொடர்பு பண்புகள் / ஒழுக்கங்கள்
1. எப்பொழுதும் புன்னகை புரிந்த முகத்துடன் இருக்கவும்; இறுக்கமான, கடுகடுத்த முகத்துடன் இருப்பதைத் தவிர்க்கவும்.

2. எப்பொழுதும் மென்மையாக உரையாடுங்கள்; குரலை உயர்த்திப் பேசுவதை தவிர்க்கவும்.

3. சத்தமின்றி மென்மையாகச் சிரியுங்கள்; பலத்த சப்தத்துடன் சிரிப்பதைத் தவிர்க்கவும்.

4. நிற்பவரிடம் எழுந்து நின்று பேசுங்கள் அல்லது அவரை அமருமாறு கூறுங்கள்; அவர் அமர்ந்த பின் நீங்கள் அமரவும்.

5. ஒருவரை சந்திக்கும் பொழுது ஸலாத்தைக் கொண்டு முந்துங்கள், இரு சந்தர்ப்பங்களில் தவிர (1) நீங்கள் அமர்ந்திருக்க, மற்றவர் உம்மை நோக்கி நடந்து அல்லது வாகனத்தில் முன்னேறி வந்தால். (2) நீங்கள் பிறருடன் சேர்ந்திருக்க, அவர் தனித்து வந்தால்.

6. ஸலாத்திற்கு உற்சாகமான, உபசரிப்பான, ஆர்வமான குரலில் முழு பதில் அளியுங்கள்.

7. பொது இடங்களில் கொட்டாவி விடுவதைத் தவிர்க்கவும். தவிர்க்க இயலாத பட்சத்தில் கை கொண்டு வாயை மூடவும்.

8. எப்பொழுதும் நேராக நிமிர்ந்து நில்லுங்கள். நீங்கள் தனித்து இருந்தால்; குனிந்தோ, சாய்ந்தோ நிற்கலாம்.

9. பேசுபவரின் உரையை(பேச்சை) கூர்ந்து, ஆர்வமுடன் கவனிக்கவும்.

10. கேட்கும் நபர் அல்லது கூட்டத்தினர் உம்முடைய பாலினமாக இருப்பின் அவர் முகத்தை நேருக்கு நேர் நோக்கிப் பேசவும்.

11. நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில் மற்றவர் தும்மிவிட்டு “அல்ஹம்துலில்லாஹ்” எனக் கூறுவதை செவியுற்றால், நீங்கள் தவறாது “யர்ஹமுகுமுல்லாஹ்” எனக் கூறவும் (அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக.)

12. மற்றவரிடம் உம்மைப் பற்றி பெருமையாக கூறவேண்டாம். பிறருடைய குறைகளை அது உண்மையாக இருந்தபோதிலும் கூறுவதைத் தவிர்க்கவும்.

13. பேசுபவரை பாராட்டத் தவறாதீர்; இடையிடையே அவருக்கு இறைவன் கிருபை செய்ய துஆ செய்யவும்.

II. புறத்தோற்ற ஒழுக்கமாண்புகள்
1. சுத்தம் ஈமானில் ஒரு பகுதி ஆகும். எனவே, எங்கும் எப்பொழுதும் சுத்தமாக இருக்கவும். நாள்தோறும் குளித்து சுத்தமான ஆடையை அணியவும்.

2. தலை முடியை குறைத்தும், சீராகச் சீவி இருக்கவும் (ஆண்களுக்கு)

3. விரல் நகங்கள் நீண்டு, அழுக்குப் பிடிக்குமுன் அவற்றை வெட்டிவிட வேண்டும். ஒவ்வொரு வெள்ளியும் தொழுகைக்குச் செல்லுமுன் அவற்றை வெட்டுவது சிறந்தது. அடிக்கடி முகம், கைகளைக் கழுவி, வாய் கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும். தலை முடியை அடிக்கடி சீவிச் சீராக இருக்க வேண்டும். (ஆண்களுக்கு)

4. இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்கவும்.

5. உட்காரும் பொழுது கைகளை, கால்களை விரிக்காது சேர்த்து அமரவும்.

6. முகத்தை இறுக்கமாக, கடுகடுப்பாக வைக்காது, இயற்கையான தோற்றத்தில் புன்னகையோடு இருப்பது சிறந்தது.

7. உங்களுக்கு அதிகம் வியர்வை வெளியேறுமாயின், ஆல்கஹால் கலக்காத அத்தர் போன்ற நறுமணம் பூசவும் (ஆண்களுக்கு).

III. வகுப்பறை ஒழுக்கம்
1. வகுப்பு தொடங்குவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு வகுப்பறையில் நுழைந்து விடுங்கள். உங்களுடைய புத்தகம், நோட்டு, பேனா முதலியவற்றை தவறாது எடுத்து செல்லவும்.

2. நேராக நிமிர்ந்து அமரவும் - பேசுபவரின் முகத்தை நோக்கவும் - அங்குமிங்கும் பார்வை அலைவதைத் தவிர்க்கவும்.

3. ஆசிரியர் பாடம் நடத்தும் போது, நன்கு கவனித்து குறிப்பு எடுக்கவும். கூட அமர்ந்திருப்பவரிடம் பேசுவதைத் தவிர்க்கவும்.

4. பாடம் எடுப்பவரை இடைமறித்து பேச வேண்டாம். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கையை உயர்த்தவும். அனுமதி கிடைத்தால் பேசவும். அனுமதி தரப்படாதப் பட்சத்தில் அமைதியாக கையை கீழே விடவும். வகுப்பு முடிந்தவுடன் தனியே சந்தித்து கேட்கலாம்.

5. வகுப்பு முடிவடையும் நேரம் நெருங்கியவுடன் பரபரப்பு அடைய வேண்டாம். ஆசிரியர் வெளியே செல்லும் வரை அல்லது வகுப்பு முடிந்து விட்டது என ஆசிரியர் அறிவிக்கும் வரை வகுப்பை விட்டு வெளியேற வேண்டாம்.

6. எந்த ஒரு அமர்வு அல்லது கூட்டத்திலும் சாப்பிடுவதோ, குடிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் வழங்கினால் சாப்பிடவோ, குடிக்கவோ செய்யலாம்.

7. ஆசிரியரின் கருத்திற்கு நீங்கள் உடன்படவில்லையெனில் அதை மென்மையாக வகுப்பறையின் ஒழுங்கு கெடாமல் கூறவும்.

IV. உண்ணும் ஒழுங்குமுறை
1. உணவு உண்ண ஆரம்பிக்கும் முன் முகம், கைகளை கழுவி, வாய்க் கொப்பளித்து சுத்தம் செய்யவும்.

2. அனைவரும் உண்ண ஆரம்பித்த பின் நீங்கள் உண்ண ஆரம்பியுங்கள். அதற்கு பிறகு தாமதமாக யாரேனும் வந்து இடமின்றி தவித்தால், உங்களுடைய இருக்கையை சுருக்கி அவரை அமர வைக்கவும்.

3. அனைவருக்கும் கேட்கும் வண்ணம் 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்' எனக்கூறி உண்ண ஆரம்பிக்கவும்.

4. உங்களால் சாப்பிட முடிந்த அளவு மட்டும் தட்டில் எடுக்கவும், தேவை ஏற்படின் மீண்டும் சிறிது உணவு எடுத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், அதிக அளவு உணவு எடுத்து சாப்பிடமுடியவில்லை என தட்டில் மீதம் வைப்பது வீண் விரயமாகும்.

5. உணவை அப்படியே விழுங்கி விடாது, நன்றாக மென்று சாப்பிடவும்.

6. வலது கை கொண்டு உணவு உண்ணவும், நீர் அருந்தவும்.

7. கூட அமர்ந்திருப்பவர்களுக்கு உணவு பரிமாறி உதவுவது சிறந்தது. ஏதேனும் கூடுதல் பதார்த்தங்கள் எடுக்க எழுந்தால் அருகில் உணவு உண்பவர்களுக்கு ஏதேனும் வேண்டுமா எனக் கேளுங்கள்.

8. மேஜையில் பரிமாறப்பட்ட உணவு தவிர ஐஸ் கிரீம், ஸ்வீட் போன்ற, தனி தட்டில் வைத்துத் தரும் உணவு உங்களுக்கு வழங்கப்பட்டது எனத் தெரியாதவரை அதை உண்ண வேண்டாம். மேலும், உங்களுக்கு வழங்கப்பட்ட இது போன்ற உணவை அருகில் உள்ளவர் எடுத்துக் கொண்டால் அதை விட்டுவிட்டு வேறு ஒன்றை நீங்கள் பரிமாறுபவரிடம் கேட்டுப் பெறவும்.

9. நீங்கள் உணவு உண்டு முடித்து விட்டாலும், அனைவரும் முடிக்கும் வரை பொறுமையாக அமர்ந்து இருக்கவும்.

10. நீங்கள் உணவருந்திய தட்டையும், மேஜையையும் சுத்தமாக வைக்கவும்.

11. உணவருந்திய பின் அனைவரும் கேட்கும்; வண்ணம் "அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறி துஆ செய்யவும்.

12. உணவருந்திய பின் கைகளை கழுவி, வாய் கொப்பளித்து சுத்தம் செய்யவும்.

V. தூங்கும் முறை
1. இரவில் முன்னதாக உறங்கச் செல்லவும்.

2. தூங்குமுன் ஒளு செய்து கொள்ளவும்.

3. படுக்கும் முன் துவா செய்யவும்.

4. கடிகார அலாரம் அடித்தவுடன் எழுந்துவிடவும். அவ்வாறன்றி, சிறிது நேரம் மெத்தையில் படுத்து இருப்போம் என எண்ணி மீண்டும் படுத்தால் தூங்கி விடுவீர்கள். ஆகவே அதைத் தவிர்க்கவும்.

5. தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தவுடன் துஆ செய்யவும்.

6. பல் துலக்கி, ஒளு செய்து, ஆடைகளை சரியாக அணிந்து கொண்டு தொழச் செல்லவும்.

7. பஜ்ர் ஃ பர்ளு தொழுகைக்கு இகாமத் கூறுமுன் பள்ளியில் நுழைந்து விடவும்.

நேரம் / கால மேலாண்மை

உங்களுக்குத் தெரியுமா?

எது நீளமானதும், குறுகியதாகவும் உள்ளது? எது விரைவாகவும், அதே சமயத்தில் மெதுவாகவும் கடப்பது? எது அனைவரும் புறக்கணித்துவிட்டு பின்பு வருந்துவது? எதுவும் அதுவின்றி நடவாது; எது அனைத்துச் சிறிய காரியங்களையும் ஒதுக்கச்செய்து, அதன் பின்விளைவோ தீங்கானது? அது என்னவென்று நீங்கள் அறிவீர்களா?

அது தான் நேரம் - காலம் என அறியப்படுவது.நேரம் / காலம் கழியும் விதம் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலத்தில் என்னென்ன காரியங்களை செய்ய எவ்வளவு நேரம் செலவழிக்கிறான் என்பதை கீழ்வரும் அட்டவணை உணர்த்துகிறது.

செயல் செய்யும் நேரம்
காலணி அணியும் நேரம் 8 நாட்கள்
போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு காத்திருத்தல் 1 மாதம்
முடிவெட்டும் நேரம் 1 மாதம்
தொலைபேசி உரையாடல் 1 மாதம்
லிஃப்ட்களில் பயணம் செய்வது (பெரு நகரங்களில்) 3 மாதங்கள்
பல் துலக்குவது 3 மாதங்கள்
பேருந்து ஃ வாகனத்திற்கு காத்திருப்பது 5 மாதங்கள்
குளிக்கும் நேரம் 6 மாதங்கள்
புத்தகம் படிப்பது 2 வருடங்கள்
உண்பது 4 வருடங்கள்
அலுவலக / வியாபார வேலைகள் 9 வருடங்கள்
தொலைக்காட்சி பார்ப்பது 10 வருடங்கள்
தூக்கம் 20 வருடங்கள்

கால மேலாண்மைக்கு அரிய சில யோசனைகள் / நேரம் வீண் விரயமாவதை தடுக்க சில வழிமுறைகள்

தினமும் காலையில் அன்றைய தினம் செய்ய வேண்டிய காரியங்களைத் திட்டமிட்டு வரிசைப்படுத்தி ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு, அதை சரிவர நிறைவேற்றுகிறோமா என அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளவும்.

_________________________________________________________
அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய அருமைமொழி ஒன்றை ஞாபகம் கொள்ளவும்.

'' எவருடைய இரண்டு நாட்களும் ஒன்று போல் - சமமாக உள்ளதோ (அதாவது நன்மை கூடி, தீமை குறையவில்லையோ) அவர் நிச்சயமாக வழிகேட்டில் உள்ளார் / நஷ்டவாளி ஆவார்'.

முடிவுரை :-
அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அம்ரு இப்னு மைமூன் அறிவிக்கக்கூடிய ஹதீஸ் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
' ஐந்து விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தி அவற்றைச் சீராக்கினால், அதையடுத்து வரும் ஐந்து விஷயங்கள் உங்களுக்கு எளிதாக இருக்கும்'.

1. நீங்கள் முதுமை அடையும் முன் உங்கள் இளமையைச் சரியாகப் பயன்படுத்துங்கள்

2. நீங்கள் நோயால் பீடிக்கப்படுமுன் உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

3. நீங்கள் வறுமை அடையுமுன் உங்கள் செல்வத்தைச் சரியாகச் செலவழியுங்கள்.

4. உங்கள் பணிச்சுமை அதிகரிக்குமுன் உங்கள் ஒய்வு நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

5. உங்களை மரணம் பீடிக்குமுன் உங்கள் வாழ்க்கையைச் சீராக, சரியாக, நல்வழியில் பயன்படுத்தி, ஈருலக வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

சிந்தியுங்கள் - செயல்படுத்துங்கள் - வெற்றி பெறுங்கள் இன்ஷா அல்லாஹ் !

வெற்றிக்கான படிகள் - (குறிப்புகள்)

வெற்றிக் கனிகள்

• மனிதகுல வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாளர், அனைத்துத் துறைகளிலும் வெற்றி கண்டவர் நமது கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பது உலகறிந்த உண்மை.

• மைக்கேல் ஹார்ட் என்ற கிறித்துவ அறிஞர் உலக வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர்களைப் பட்டியலிட்டு, ''தர நிர்ணயம்"" வழங்கிய போது முதலாவதாக அவர் தேர்ந்தெடுத்தது முஹம்மது (ஸல்) அவர்களைத் தான். அதற்கு அவர் கூறிய காரணம், “உலக வரலாற்றில் ஆன்மீகம் மற்றும் லௌகீகம் - உலகியல் ஆகிய இரு துறைகளிலும் ஒரு சேர வெற்றி கண்டவர் முஹம்மது நபியைத் தவிர வேறு எவரையும் நான் காணவில்லை" என்பதாகும்.

• திருக்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தான் முழு மனித குலத்திற்கும் பின்பற்றத்தக்க முன் மாதிரியாக அறிவிக்கின்றது. உண்மையில் அவர் ஒருவர் தான் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரு வாழ்க்கையிலும் மனிதர்கள் வெற்றி அடைவதற்குரிய வழிமுறைகளைத் தெளிவாக நமக்கு வாழ்ந்து காண்பித்துள்ளார்.

• முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் படித்து அவர் வெற்றிகரமாக பின்பற்றிய கொள்கைகளை - செய்த நற்செயல்களை நாமும் பின்பற்றலாம். ஏனெனில், தோல்வியையும் வெற்றியாக மாற்றவல்ல சீரிய சிந்தனையாளராக அவர் விளங்கினார்.

• அவருடைய அனைத்துச் செயல்களும் நல்ல முடிவினை - வெற்றியை தருவதாக இருந்தன. அவர் தீமை மற்றும் தீய பின் விளைவுகளை ஏற்படுத்தும் காரியங்களை - செயல்களை விட்டு என்றுமே ஒதுங்கி இருந்தார்.

________________________________

1. முதல் கனி

தன்னால் செய்து முடியக்கூடிய செயல்களிலிருந்து ஆரம்பம் செய்வது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கக் கூடிய ஹதீஸ், புகாரியில் கீழ்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எப்பொழுதெல்லாம் ஒரு விஷயம் குறித்து இரு கருத்துக்கள் நிலவுகிறதோ, அவற்றில் மிகவும் எளிதானதையே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.”

மிகவும் எளிதான இலகுவான வழியை தேர்ந்தெடுப்பது என்னவெனில் தன் ஆற்றலால் சக்தியால் செய்து முடிக்கக் கூடிய விஷயத்திலிருந்து ஆரம்பம் செய்வது. எவர் இவ்விதமாக தன் காரியங்களையும் செயல்களையும் ஆரம்பிக்கின்றாரோ அவர் தான் வெற்றி பெறுவார்.

2. இரண்டாவது கனி
பாதகத்தை, சாதகமாக மாற்றுவது.

இஸ்லாமிய ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலகட்டத்தில் மக்கா குறைஷிகளால் முஹம்மது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் பெருந்துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அச்சமயத்தில் இறைவன் திருமறையின் ஓர் வசனத்தை ஆறுதலாக இறக்கியருளினான்.

''ஒவ்வொரு துன்ப காலத்திற்கு பின்பும் இன்பம் - மகிழ்ச்சி உள்ளது. ஒவ்வொரு துன்ப காலத்திற்கு பின்பும் இன்பம் - மகிழ்ச்சி உள்ளது""அல்குர்ஆன் சூரா நஷ்ரஹ் 94 : 5 - 6

இவ்வசனம் நமக்கு உணர்த்துவது என்னவெனில் ஒருவர் எப்பொழுதெல்லாம் துன்பம் - துயரம் அனுபவிக்கிறாரோ அதைத் தொடர்ந்து இன்பம் நன்மை உறுதியாக வரவுள்ளது என நம்பி பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஆகவே, துன்பம் - துயரத்தை உறுதியுடனும், துணிச்சலோடும் எதிர்கொண்டு, வரவிருக்கும் இன்பம் - நன்மையை எதிர்பார்த்துப் பொறுமையோடு இருப்பவரே வாழ்வில் வெற்றி பெறுவார்.

3. மூன்றாவது கனி
பணி இட மாற்றம் செய்வது.

எங்கு நமக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறதோ அங்கு நம்முடைய இருப்பிடத்தை மாற்றிக் கொள்வது. இது நமக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிஜ்ரா தரும் படிப்பினை. மக்காவிலிருந்து மதீனாவிற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இடம் பெயர்ந்ததற்கு முக்கிய காரணம் மதீனாவில் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமையில் கட்டுப்பட்டு வாழ விரும்பி முன் வந்ததாகும்.

4. நான்காவது கனி
எதிரியை அன்பால் வீழ்த்தி தோழனாக்கி கொள்வது

இஸ்லாமிய ஆரம்ப கால வரலாற்றில் மக்கத்துக் குறைஷிகளால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். அப்பொழுது இறைவன் தன் திருமறை குர்ஆன் மூலம் அறிவுறுத்துகிறான்.

''உமக்கு தீமையே செய்தவனுக்கும் நன்மை செய். அதன் மூலம் உம்முடைய பெரும் எதிரி கூட உம் உற்ற நண்பன் ஆவதை காண்பீர்". அல்குர்ஆன் சூரா ஃபுஸ்ஸிலத் 41: வசனம் 34

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தன் அன்பிற்குரிய சிறிய தந்தை பாலைவனச் சிங்கம் ஹம்ஜா (ரலி) அவர்களை நயவஞ்சகமாக வீழ்த்தி, அவர் உடலைக் கூறுபோட்டு கேவலப்படுத்திய ஹிந்தா, மற்றும் பல போர்களுக்கு தலைமையேற்ற அபு சுஃப்யான் போன்றோரை மக்கா வெற்றிக்குப் பின்பு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெருந்தன்மையுடன் மன்னித்து விட்டனர். அதன் விளைவு அவர்கள் இருவரும் இஸ்லாத்தைத் தழுவி, நபியுடைய தோழி, தோழன் - சஹாபா (ரலி) ஆகினார்கள்.

இக்கொள்கையை என்றும் திருந்தாத கல் நெஞ்சக் கயவர்களிடம் பயன்படுத்த இயலாது. உதாரணம் அபு ஜஹ்ல்.

5. ஐந்தாவது கனி
நற்சந்தர்பங்களை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது.

சந்தர்ப்பம் - வாய்ப்பு ஒருவனுக்கு வாழ்க்கையில் ஒருமுறை தான் வரும். யார் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கிறாரோ அவர் வெற்றி பெறுவார். இதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த எண்ணற்ற விஷயங்களில் ஒன்றைக் குறிப்பிடலாம். பத்ர் யுத்தத்திற்கு பின்பு முஸ்லிம்களிடம் 70 நிராகரிப்பாளர்கள் கைதிகளாக இருந்தனர். அவர்களில் பிணைத்தொகைக் கட்டினவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பிணைத்தொகைக் கட்ட இயலாதவர்களுக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் விடுதலைக்கு எளிய வழி ஒன்றைக் கூறினார்கள்.

• தவறுகளுக்கு அஞ்சுங்கள் / விமர்சனங்களை மதியுங்கள்.
உமர் (ரலி) கூறினார்கள் என்னுடைய “தவறுகளை / குறைகளை சுட்டிக்காட்டுபவர் மீது இறைவன் கருணை புரிவானாக.”

• தோல்விகளைக் கண்டு அஞ்சாதீர்கள்.
முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள். எந்த ஒரு முஃமீன் இறை நிராகரிப்பாளர்களோடு கலந்து உறவாடி, அவர்களுக்கு நன்மை செய்ய நாடி தோல்வி கண்டு புண்படுகிறாரோ அவர், நிராகரிப்பாளர்களோடு உறவாடாது ஒதுங்கி இருப்பவரை விட சிறந்தவர்.

• அவரவருக்குரிய மரியாதையை, கண்ணியத்தை கொடுங்கள்.
“யார் ஒரு மனிதருக்கு ஒரு பொறுப்பை, பதவியை அவரைவிட சிறந்தவர், தகுதியானவர் இருக்க,வழங்குகிறாரோ அவர் நிச்சயமாக, அல்லாஹ்வையும், அவன் தூதரையும், அனைத்து முஸ்லிம்களையும் ஏமாற்றியவராவார்”.- அல்ஹாதீம் மற்றும் இப்னுதைமிய்யா

• அழைப்பு பணியில் சிறக்க பொறுமை அவசியம்:
நிச்சயமாக உங்களை ஒரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள் மற்றும் கனி வர்க்கங்களின் இழப்பினாலும் நாம் சோதிப்போம். அச்சமயத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பவருக்கு(நபியே!) நற்செய்தி கூறுவீராக. பொறுமை உடைய அவர்கள் தங்களுக்கு துன்பம் ஏதேனும் பீடித்தால் “ நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள். அவனிடமே நம் மீளுதலும் இருக்கிறது” என்று கூறுவர். இத்தகைய பொறுமையுடையோருக்கே இறைவன் அருளையும்,கருணையையும் வழங்குவான். இத்தகையோரே தம் இறைவனின் நல் வழியில் செல்வர்” அல்குர்ஆன் சூரா பகரா 2: 155 - 157

அல்லாஹ்வுடன் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் செயல்கள்:
அல்லாஹ் இறுதி தீர்ப்பு கியாம நாளில் கூறுவான்:-
“ஒ ஆதமின் மகனே! நான் நோயுற்றிருக்கும் போது நீ என்னை சந்தித்து ஆறுதல் அளிக்கவில்லையே!. அதற்கு அந்த மனிதன் கூறுவான்: ''யாஅல்லாஹ்! அகிலங்களின் இறைவனான உன்னை எவ்வாறு நான் சந்திக்க முடியும்?"" அதற்கு இறைவன் கூறுவான்: ''என்னுடைய இந்த அடியான் நோயுற்றிருந்ததை நீ அறியவில்லையா? அவனை நீ சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால், நிச்சயமாக அது என்னை சந்தித்ததற்கு சமமாகும்"".

''ஆதமின் மகனே! நான் பசியோடு உன்னை அணுகியபோது நீ எனக்கு உணவளிக்கவில்லையே!"" அதற்கு அம்மனிதன் கூறுவான்: ''யாஅல்லாஹ்! அகிலங்களின் இறைவனான உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க முடியும்?"" அதற்கு இறைவன் கூறுவான்: ''என்னுடைய இந்த அடியான் பசியோடு உன்னை அணுகி உணவு கேட்டானே, அவனுக்கு நீ உணவு அளித்திருந்தால், நிச்சயமாக அது எனக்கு உணவளித்ததற்கு சமமாகும்!".

''ஆதமுடைய மகனே! நான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து நீர் கேட்ட போது, நீ தண்ணீர் அளிக்கவில்லையே!"" அதற்கு அம்மனிதன் கூறுவான்: ''யாஅல்லாஹ்! அகிலங்களின் இறைவனான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர முடியும்?"" அதற்கு இறைவன் கூறுவான்: ''என்னுடைய இந்த அடியான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து தண்ணீர் கேட்கவில்லையா? அப்போது நீ அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் நிச்சயமாக அது எனக்குத் தண்ணீர் கொடுத்ததற்குச் சமமாகும்"".முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹ-ரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் - ஸஹீஹ் முஸ்லிம் எண் : 18

இந்த ஹதீஸ் நமக்கு தரும் படிப்பினை என்னவென்றால் தேவையுடையோர் நம்மை அணுகும் போது அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வது நம் தலையாய கடமையாகும்.

முக்கிய பண்புகள் / ஒழுக்கங்கள்
• தவிர்க்க வேண்டியவை
எதிலும் ஈடுபடாது ஒதுங்கிக் கொள்வது
நான் ஈடுபட விரும்பவில்லை என அடிக்கடி கூறுவது.
முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள் - “''இஸ்லாத்தில் துறவறத்திற்கு அனுமதி இல்லை"".

ஒரு கைதி 10 முஸ்லிம்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தால் விடுதலை செய்யப்படுவார் என அறிவித்தார்கள். இது தான் இஸ்லாமிய வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட முதல் அறிவொளி இயக்கம். அதன் மாணவர்களோ முஸ்லிம்கள். ஆசிரியர்களோ எதிரிப் படை நிராகரிப்பாளர்கள். இதை அறிந்த இங்கிலாந்து நாட்டு அறிஞர் ஒருவர் கூறுகின்றார்: ''தனக்கு வந்த கஷ்ட காலத்தையும் - எதிர்ப்பையும் திடமான மனத்துடன் எதிர்க்கொண்டு தோல்வியை வெற்றியாக மாற்றிக் காட்டியவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தான்" என்று புகழாரம் சூட்டினார்.

6. ஆறாவது கனி
பழி வாங்குவதைக் காட்டிலும் மன்னிப்பே சிறந்தது.

பழிவாங்கும் தன்மையைக் காட்டிலும் மன்னிக்கும் பண்பே சிறந்தது. மக்கா வெற்றி கொள்ளப்பட்டு,பல்லாயிரக்கணக்கான தன் தோழர்களோடு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவினுள் பிரவேசித்தார்கள். அப்பொழுது மக்காவிலிருந்த குறைஷி நிராகரிப்பாளர்கள் சொற்பத் தொகையினரே. அவர்கள் எல்லாம் பல ஆண்டுகள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்தம் தோழர்களுக்கும் பல்வேறு தொல்லைகள், துன்பங்கள் இழைத்தவர்கள். அவர்கள் எல்லாம், பெரும்படையுடன் மக்காவினுள் பிரவேசிக்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம்மை பழிவாங்குவார்கள் என அஞ்சி தங்கள் வீடுகளுக்குள் முடங்கி, பயந்து கொண்டு இருந்தனர். ஆனால், பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களோ ''தவறு செய்த அனைவரையும் நான் மன்னித்து விட்டேன். நீங்கள் அச்சம் கொள்ளாது சுதந்திரமாக வெளியே வரலாம்", எனக்கூறி பொது மன்னிப்பு வழங்கினார்கள். அதன் பயன் - விளைவு என்ன தெரியுமா? அவருடைய எதிரிகள் நெஞ்சுருகி, எவரை ஒழித்துக் கட்டுவது, தம் வாழ்நாளின் குறிக்கோள் என்று கூறி வந்தனரோ செயல்பட்டனரோ, அவரையே தம் தலைவராக மனமுவந்து ஏற்றார்கள் - இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

காலத்தின் முக்கியத்துவம்

• நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்கவும்; ஏனெனில், அதுவே உங்கள் ஆற்றலின் / திறமையின் அளவுகோல்.

• உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவும்; ஏனெனில், அதுவே உங்கள் இளமையின் ரகசியம்.

• படிப்பதற்கு நேரம் ஒதுக்கவும்; ஏனெனில், அதுவே உங்கள் அறிவின் ஊற்றுக்கண்.

• பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்கவும்; ஏனெனில், அதுவே பூமியில் மனிதனுக்கு மன அமைதி அளிக்கும் பெரும் கிரியா ஊக்கி.

• அன்பு செலுத்தவும், செலுத்தப்படவும் நேரம் ஒதுக்கவும்; ஏனெனில், இறை நம்பிக்கை என்பது அன்பும், வெறுப்பும் சார்ந்தது. (இறைவனும், அவன் தூதரும் விரும்பியவற்றின் மீது விருப்பம் கொள்வது அன்பு; தடுத்தவற்றை விட்டு விலகுவது வெறுப்பு)

• சிநேகமாக இருக்க நேரம் ஒதுக்கவும்; ஏனெனில், அதுவே சந்தோஷத்தின் வழி.

• நகைச்சுவைக்கு நேரம் ஒதுக்கவும் ; ஏனெனில், அதுவே சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.

• பிறர் நலனில் அக்கறை காட்ட நேரம் ஒதுக்கவும்; ஏனெனில் வாழ்க்கை என்பது சுயநலம் என்ற குறுகிய வட்டத்திற்கு உட்பட்டதல்ல... பொது நலம் என் சிறப்பின்பாற்பட்டது.

• பணி / வேலை செய்ய நேரம் ஒதுக்கவும், ஏனெனில் அதுவே உங்கள் வெற்றியின் திறவு கோல்.

ஆனால், என்றுமே நேரத்தை வீண் செயல் / பேச்சில் கழிக்க வேண்டாம்.

2. எந்தவொரு நண்பரையும் முன்கூட்டி தகவல் தெரிவிக்காது அல்லது அனுமதி பெறாது சென்று சந்திக்க வேண்டாம்.

3. எப்பொழுதும் உங்களுடன் சிறிய கையேடு மற்றும் பேனா வைத்து இருங்கள். அதனால், உங்களுக்கு திடீரென்று தோன்றக்கூடிய எண்ணங்களை / யோசனைகளை அதில் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

4. உங்களுடைய வேலைகளுக்கிடையில் ஓய்வு நேரங்களை திட்டமிடுங்கள். எவ்வாறெனில் ஒய்வு நேரமும், தொழுகை நேரமும் ஒன்றாக இருக்க வேண்டும்.

5. உங்களுக்குக் கிடைக்கும் உபரியான ஓய்வு நேரங்களை புத்தகம் படிப்பது, குர்ஆன் மனனம் செய்வது போன்ற பயனுள்ள காரியங்களுக்குப் பயன்படுத்தவும்.

6. நீங்கள் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்தால், அவருக்கு சந்திக்கும் நேரத்தை தெளிவாக தெரிவிக்கவும்.

7. நீங்கள் தூரமான வெளியிடங்களுக்கு செல்லும் போது, சரியான நேரத்திற்குச் செல்லும் பொருட்டு, இடையில் எதிர்பாராது ஏற்படும் தடங்கல்களையும் கணக்கில் கொண்டு, குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது முன்னதாக கிளம்புவது சாலச் சிறந்தது.

8. எந்த ஒரு வேலை செய்வதாக இருந்தாலும், உதாரணமாக சமையலோ, கட்டுரை எழுதுவதோ அல்லது உரை நிகழ்த்துவதோ அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும், பொருட்களையும் முன் கூட்டியே தயார் செய்து வைப்பது மிகவும் சிறந்தது.

9. எந்தவொரு நோக்கமோ, பிரயோஜனமோ இன்றி பேசுபவர்களைத் தவிர்ப்பது நேரம் வீண் விரயமாவதைத் தடுக்கும்.

10. தொலைபேசி மூலமோ அல்லது கடிதம் மூலமோ செய்து முடிக்க வேண்டிய காரியத்தை அல்லது பிறருக்கு தெரிவிக்க வேண்டிய செய்தியை, எக்காரணம் கொண்டும் பயணம் மேற்கொண்டு செய்வது நேரம் வீண் விரயமாகும்.

11. எதிர்பாராத செலவுகளுக்கு முன்னேற்பாடாக சில்லறை நாணயங்களைக் கையில் எப்பொழுதும் வைத்திருப்பது சிறந்தது.

12. உங்கள் வீட்டிற்கு மளிகை சாமான்களோ அல்லது அலுவலகத்திற்குத் தேவையான பொருட்களோ வாங்க வேண்டியிருப்பின் முதலில் தேவையான பொருட்களை பட்டியலிட்டு, சரிபார்த்தபின் செல்லவும். ஏனெனில், சிலவற்றை மறந்துவிட்டு மீண்டும் செல்வதை இது தவிர்க்கும்.

அழைப்புப்பணி பயிற்சிக் கையேடு

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான்னிர் ரஹீம்

முன்னுரை :

அல்லாஹ் மனிதனுக்கு அளித்துள்ள அளப்பரிய நன்மைகளில் - நற்பேறுகளில் சிந்திக்கும் திறன் கொண்ட மூளையே மிகச் சிறந்த நற்பேறாகும். எனினும், மருத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வு ''மனிதன் தன் மூளையை கால் பகுதிக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறான்"", என்ற உண்மையை நமக்கு உணர்த்துகிறது.

பயிற்சியின் நோக்கம் :

• கலந்து கொள்ளும் சகோதரர்களிடம் அவர்களுக்கே தெரியாது அவர்களிடம் மறைந்துள்ள - புதைந்துள்ள, திறமைகளை - ஆற்றல்களை - சக்திகளை வெளிக்கொணர்வது.
• தங்களால் என்னென்ன சாதிக்க முடியும் என்பதை கலந்து கொள்ளும் சகோதரர்கள் அறிந்து கொள்ள துணைபுரிவது.
• கலந்து கொள்ளும் சகோதரர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் மேன்மேலும் மேம்படுத்த உதவுவது.

''மனிதர்கள் தங்களைத் தாங்களே மாற்றி - திருத்திக் கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் நிலைமைகளை மாற்ற மாட்டான்.” (அல்குர்ஆன் சூரா ரஃது 13: வசனம் 11)

தாவா” பயிற்சி வகுப்பு - பாடத் திட்டம்

முதல் வாரம்
திருக்குர்ஆன் வசனம் ஏதேனும் ஒன்றைக் குறித்து விளக்கவுரை - அரபி மூலத்துடன்.

இரண்டாவது வாரம்
நபி முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு சம்பவத்தை குறித்து பேசுவது மற்றும் அதிலிருந்து நாம் பெறும் படிப்பினையைக் கூறுவது.

மூன்றாவது வாரம்
பிறமத நண்பர்கள் இஸ்லாம் குறித்து கூறும் தவறான குற்றச்சாட்டுகள், ஐயங்களுக்கான பதில்.

நான்காவது வாரம்
மாதாந்திர தேர்வு.

ஐந்தாவது வாரம் (இருக்குமேயானால்)
ஏதேனும் ஒரு தலைப்பில் ஐந்துநிமிடம் திருக்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பேசுவது.

_______________________
பயிற்சி வகுப்பின் விதிகள்

(1) பேசுபவர்கள் திருக்குர்ஆன், மற்றும் ஹதீஸ் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக பேச வேண்டும்.

(2) வகுப்பில் மொபைல் தொலைபேசியை Switch Off செய்ய வேண்டும் / Mute Mode-ல் வைத்திருக்க வேண்டும்.

(3) தொடர்ந்து மூன்றுவகுப்பிற்கு வராதவர்கள் பெயர் நீக்கப்படும்.

(4) கொடுக்கப்பட்ட தலைப்பில் குறித்த நேரத்தில் பேசி முடிக்க வேண்டும்.

(5) வகுப்பின் இடையில் பேசுவது, சலசலப்பு ஏற்படுத்துவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

(6) ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிடுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். அவருடைய பேச்சில் ஏதேனும் தவறு இருக்குமாயின், அவர் பேசி முடித்த பின் வகுப்பு ஆசிரியரின் அனுமதி பெற்று பேச வேண்டும்.

(7) வகுப்பிற்கு வருமுன்பே அன்றைய பாடத் திட்டத்தின்படி தயார் செய்து வரவேண்டும். மற்றவர் பேசிக் கொண்டிருக்கையில் வகுப்பில் அமர்ந்து, அவர் பேசுவதை கேட்காமல் அவசர தயாரிப்பில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

___________________