அழைப்பு!

Saturday, March 26, 2005

இஸ்லாத்தில் இல்லை - கட்டாய மதமாற்றம்!

அரங்கு முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் அவர்களில் முஸ்லிம்கள் சிலர் மட்டுமே! மற்றவர்கள் சகோதர சமுதாயத்தவர்கள்.

தொலைக்காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது.

கல்லூரி மானவர்கள், குறிப்பாக முஸ்லிமல்லாத மாணவர்கள் இஸ்லாம் தொடர்பாக எந்தக் கேள்வியும் கேட்கலாம். புகழ்பெற்ற மார்க்க அறிஞர் ஒருவர் அவர்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார். நிகழ்ச்சி (படப்பிடிப்பு) தொடங்கியது. பார்வையாளனாக நானும் ஒரு ஓரத்தில்…!

மாணவர் ஒருவர் எழுந்து வினா ஒன்றை தொடுத்தார்.

''என்னுடைய கேள்வி சற்றுக் கடுமையாக இருக்கும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. விளக்கம் பெறவே இந்த கேள்வி. மதமாற்றத்தை இஸ்லாம் விரும்புகிறதா? கட்டாயமாக பிறரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுங்கள் எனக் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதாமே? இது ஏன்? இது சரியா? என்று படபட வென வினாக்களை பொழிந்து விட்டு அந்த மாணவர் அமர்ந்தார்.

விளக்கம் சொல்ல எழுந்த அறிஞரின் முகத்தில் வசீகர புன்னகை.

நண்பர் ஓர் அருமையான கேள்வி கேட்டுள்ளார். போலித்தனமோ, பாசாங்கோ இல்லாமல் அவர் வெளிப்படையாகத் தன் மனதில் இருப்பதைக் கேட்டுள்ளார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். மதமாற்றம் குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டத்தினைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

''நான் குர்ஆனை முழுமையாக ஓதி உணர்ந்தவன்…! குர்ஆனில் எந்த ஓர் இடத்திலும் 'கன்வர்ட்" (Convert) மதம் மாற்றுதல் எனும் சொல்லே இல்லை. ஆனால் 'கன்வே" (Convey) எடுத்துரைத்தல், அறிவித்தல் எனும் சொல் பல இடங்களில் உள்ளது.

இஸ்லாத்தின் கொள்கைகளை பிறருக்கு எடுத்துரைக்கலாம். ஆனால் மதம் மாறும்படி வர்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.

"மார்க்கத்தில் எந்த கட்டாயமும் இல்லை, தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது." என்று அல் குர்ஆன் 02:256 கூறுகிறது.

அருள்மறை குர்ஆன் மற்றோர் இடத்தில் அழகாகக் குறிப்பிடுகிறது.

''உலகிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டு கீழ்படிந்தவர் களாகவே இருக்க வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் இப்பூமியில் உள்ள அனைவருமே நம்பிக்கை கொண்டிருப் பார்கள். அப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையாளர்கள் ஆகிவிட வேண்டும் என்று நீங்கள் அவர்களை கட்டாயப் படுத்துவீர்களா?" (அல் குர்ஆன் 10:99)

ஆகவே வற்புறுத்தல், கட்டாய மதமாற்றம் என்பது கடுகளவும், கடுகின் முனையளவும் இஸ்லாத்தில் இல்லை. அதே சமயம் மார்க்கத்தின் அடிப்படைகளை ஓரிறைக் கொள்கை, தூதுத்துவம் மறுமைச் சிந்தனை போன்றவற்றை மக்களிடம் எடுத்துரைப்பது முஸ்லிம்களின் கடமை. இஸ்லாத்தில் மனிதநேய கருத்துக்களை அது கூறும் சகோதர சமத்துவத்தைப் பிறருக்குப் புரியவைக்க வேண்டும். இறைவன் இருக்கிறான் என்பதற்கான சான்றுகளைச் சிந்தித்துப் பார்க்கும்படி சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படி தாமாக முன்வந்து நமக்கு விருப்பமான மதத்தை ஏற்கவும் பின்பற்றவும் நம்முடைய அரசியல் சாசனமும் அனுமதிக்கிறது.

அறிஞரின் இந்த விளக்கத்தை கேட்டதும் அந்த மாணவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். இஸ்லாம் குறித்து வெகுநாட்களாய் என் உள்ளத்தில் இருந்த தவறான கருத்து உங்கள் விளக்கத்தின் மூலம் நீங்கிவிட்டது. குர்ஆனின் பரந்த கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டேன்.

''அல்ஹம்துலில்லாஹ்- இறைவனுக்கே அனைத்துப்புகழும்"" எனக் கூறி அறிஞர் அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

___________________________________________________________________

1 Comments:

Post a Comment

<< Home